Breaking News
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி

16 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் புளோம்பாண்டீனில் நேற்று நடந்த ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா, நியூசிலாந்துடன் மோதியது. ‘டாஸ் ஜெயித்த நியூசிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 23 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 115 ரன்கள் எடுத்திருந்த போது மழை கொட்டியது. அப்போது ஜெய்ஸ்வால் 57 ரன்னுடனும், திவ்யான்ஷ் சக்சேனா 52 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

மழையால் ஆட்டம் நீண்ட நேரம் பாதிக்கப்பட்டதால் மேற்கொண்டு இந்திய அணி பேட்டிங் செய்யவில்லை. அதன் பிறகு டக்வொர்த்- லீவிஸ் விதிமுறைப்படி 23 ஓவர்களில் நியூசிலாந்து அணி 192 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி ஆடிய நியூசிலாந்து 21 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சுழற்பந்து வீச்சாளர்கள் ரவிபிஷ்னோய் 4 விக்கெட்டுகளும், அதர்வா அங்கோல்கர் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

ஏற்கனவே இலங்கை, ஜப்பானை வீழ்த்தியிருந்த இந்தியாவுக்கு இது 3-வது வெற்றியாக (ஹாட்ரிக்) பதிவானது. தனது பிரிவில் முதலிடத்தை பிடித்த இந்திய அணி கால்இறுதியில் ஆஸ்திரேலியாவை வருகிற 28-ந்தேதி சந்திக்கிறது.

தோல்வி அடைந்தாலும் நியூசிலாந்து அணி (3 புள்ளி) கால்இறுதி வாய்ப்பில் நீடிக்கிறது.

இந்த பிரிவில் இன்று நடக்கும் கடைசி லீக்கில் இலங்கை-ஜப்பான் அணிகள் மோதுகின்றன. இதில் குட்டி அணியான ஜப்பான் மெகா வெற்றியை பெற்றால் மட்டுமே நியூசிலாந்தின் வாய்ப்பு பறிபோகும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.