Breaking News
செப்டம்பர் 27-ந்தேதி தொடங்கும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரசிகர்களை அனுமதிக்க முடிவு

ஆட்கொல்லி நோயான கொரோனா வைரசின் அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு சர்வதேச டென்னிஸ் போட்டிகள் நிறுத்தப்பட்டன. நூற்றாண்டுகால பழமை வாய்ந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி 2-ம் உலகப்போருக்கு பிறகு முதல்முறையாக ரத்து செய்யப்பட்டது. மே மாதத்தில் நடக்க வேண்டிய பிரெஞ்ச் ஓபன் உள்ளிட்ட பல போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டன.

இந்த நிலையில் திருத்தப்பட்ட புதிய போட்டி அட்டவணையை டென்னிஸ் அமைப்புகள் தற்போது அறிவித்துள்ளன. இதன்படி ஆகஸ்டு 3-ந்தேதி இத்தாலியின் பாலெர்மோ நகரில் ‘லேடிஸ் ஓபன்’ போட்டியின் மூலம் டபிள்யூ.டி.ஏ. எனப்படும் பெண்கள் டென்னிசும், ஆகஸ்டு 14-ந்தேதி வாஷிங்டனில் சிட்டி ஓபன் மூலம் ஏ.டி.பி. எனப்படும் ஆண்கள் சர்வதேச டென்னிசும் மீண்டும் தொடங்குகிறது. அனைத்து போட்டிகளிலும் கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் உயரிய மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

களிமண் தரையில் நடைபெறும் ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி செப்டம்பர் 27-ந்தேதி முதல் அக்டோபர் 11-ந்தேதி வரை பாரீஸ் நகரில் நடக்கிறது. ‘இந்த போட்டி பூட்டிய மைதானத்தில் நடக்காது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரசிகர்கள் நிச்சயம் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் எவ்வளவு பேர் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை’ என்று பிரான்ஸ் டென்னிஸ் சம்மேளன தலைவர் பெர்னர்ட் குடிசெலி தெரிவித்தார். பிரெஞ்ச் ஓபனுக்கு முன்னோட்டமாக மாட்ரிட் ஓபன், இத்தாலி ஓபன் ஆகிய போட்டிகளும் நடக்க உள்ளன.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி திட்டமிட்டப்படி ஆகஸ்டு 31-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 13-ந்தேதி நிறைவடைய இருப்பதை அமெரிக்க அரசு ஏற்கனவே உறுதி செய்து விட்டது. ஆனால் இந்த சீசனில் ரசிகர்கள் இன்றி நடத்தப்பட உள்ளது. அமெரிக்க ஓபனில் களம் காண ஆர்வமுடன் காத்திருப்பதாக 6 முறை சாம்பியனும், முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ், நடப்பு சாம்பியன் கனடாவின் பியான்கா ஆன்ட்ரீஸ்கு ஆகியோர் உற்சாகமாக கூறியுள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.