Breaking News
இந்திய எல்லை பகுதியில் ஒரு அங்குலம் கூட யாருக்கும் விட்டு கொடுக்கக்கூடாது – அனைத்து கட்சி கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

இந்திய-சீன எல்லை பிரச்சினை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று காணொலி காட்சி மூலம் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:

லடாக்கில் இந்திய-சீனாவின் உண்மையான கட்டுப்பாட்டு எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து விவாதிக்க இந்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியதற்காக பிரதமருக்கு நன்றி. இது மிகவும் சரியான மற்றும் அவசியமான கூட்டமாகும்.

நாட்டிலுள்ள அனைவரும் இந்திய அரசாங்கத்தின் பின்னால், நமது நாட்டின் எல்லைகளையும், நமது தேசத்தையும் பாதுகாக்க, ஒற்றுமையாக நிற்கிறோம் என்பதை நிரூபிக்க நம் அனைவருக்கும் கிடைத்த ஒரு வாய்ப்பாகும். லடாக்கின் எல்லைப் பகுதியில், தேசத்துக்காக போராடும் போது வாழும் சூழ்நிலை அற்ற நிலப்பரப்பில் எல்லைப் பகுதியில், தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த துணிச்சலான 20 இந்திய வீரர்களுக்கு எனது வீர வணக்கத்தை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

முன் எப்போதும் இல்லாத நெருக்கடியாக கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் நமது நாடு ஒரு பக்கம் ஈடுபட்டிருக்கும் போது, மறு பக்கம் சீன தரப்பினரின் கடுமையான நடவடிக்கைகள் காரணமாக நாடு ஒரு புதிய சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது. நமது நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் பிரதமர், மத்திய அரசு மற்றும் நமது பாதுகாப்பு படைகளுக்கு பின்னால் தமிழகமும் மற்றும் அ.தி.மு.க. கட்சியும் உறுதியாக நிற்கின்றன. இந்தியாவின் எல்லைப் பகுதியில் ஒரு அங்குலம் கூட ஒருபோதும் யாருக்கும் விட்டுக் கொடுக்க கூடாது.

எங்களது தலைவர் ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தியதுபோல, நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு எந்தநிலையிலும் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த அம்சத்தில் எந்த சமரசமும் இருக்க முடியாது. சமீபத்தில் இறந்த 20 ராணுவ வீரர்களில் ஒருவர் தமிழத்தை சேர்ந்தவர்., ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தியாகி அவில்தார் கே.பழனி. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான ஒவ்வொரு இந்தியரும் நாட்டைப் பாதுகாப்பார்கள், மிகச்சிறந்த தியாகம் செய்யத் தயாராக இருப்பார்கள் என்பதையே இவ்வீரரின் மறைவு சரியாக நிரூபிக்கிறது.

பிரதமர் இந்த நெருக்கடியான நிலைமையைக் கையாள்வதில் மிகுந்த புத்திசாலித்தனத்தையும் உறுதியையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்திய அரசு மற்றும் நமது பாதுகாப்புப் படைகள் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழு ஆதரவளிக்கிறோம். இந்த நெருக்கடியை எதிர்கொள்வதில் மத்திய பாதுகாப்புத் துறை மந்திரியும் மிகுந்த துணிச்சலுடன் செயல்பட்டு வருகிறார். பிரதமரின் புத்திசாலித்தனமான மற்றும் ஊக்கமளிக்கும் தலைமையின் கீழ் நமது நாடு, தொற்றுநோயால் ஏற்படும் சவால்களை மட்டுமல்ல, நம்முடைய எதிரிகள், எவருடைய முயற்சிகளையும் நிச்சயமாக வெல்லும் என்று உறுதியாக நம்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.