Breaking News
ஆகஸ்டு மாதத்தில் இலங்கை பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி நடத்த திட்டம்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் மத்தியில் இருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் பல நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் வருவாய் இழப்பை சந்தித்துள்ளன. இதில் இலங்கை கிரிக்கெட் வாரியமும் ஒன்றாகும். இலங்கையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இல்லை.

இந்திய அணிக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் வங்காளதேச அணிக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை சொந்த மண்ணில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் முயற்சி மேற்கொண்டது. ஆனால் இந்த போட்டி தொடருக்கு தற்போது சாத்தியமில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கைவிரித்துவிட்டது. வங்காளதேச அணியும் இலங்கைக்கு சென்று விளையாட வாய்ப்பில்லை. அத்துடன் ஐ.பி.எல். போட்டியை இலங்கையில் நடத்த வருமாறு இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு விடுத்த அழைப்புக்கும் சாதகமான ‘சிக்னல்’ கிடைத்தபாடில்லை. செப்டம்பரில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுவதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இதனால் வருகிற ஆகஸ்டு மாதத்தில் ஐ.பி.எல். பாணியில் ‘இலங்கை பிரிமீயர் லீக்‘ என்ற பெயரில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை நடத்தலாமா? என்பது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்த போட்டியில் உள்ளூர் வீரர்களுடன், வெளிநாட்டு வீரர்களையும் கலந்துகொள்ள வைக்கலாம் என்று நினைக்கிறது.

இந்த போட்டியில் 5 அணிகளை களம் இறக்கும் வாய்ப்பு குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. கொள்கை அளவில் இருக்கும் இந்த போட்டிக்கு எப்போது இறுதி வடிவம் கிடைக்கும் என்பது தெரியவில்லை. இதுபோன்ற லீக் கிரிக்கெட் போட்டியை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் இதுவரை 6 முறை முயற்சி செய்துள்ளது. ஆனால் 2012-ம் ஆண்டில் மட்டுமே போட்டி நடத்தப்பட்டது. அதற்கு போதிய வரவேற்பு இல்லாததுடன், ஊழல் புகாரும் எழுந்ததால் அந்த ஆண்டுடன் போட்டி கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.