Breaking News
நக்சலைட்டுகள் – பாதுகாப்பு படையினர் இடையே மோதல் நடந்த இடத்தை நேரில் பார்வையிடுகிறார் அமித்ஷா

புதுடெல்லி,

சத்தீஷ்கார் மாநிலத்தில் தெற்கு பஸ்தார் வனப்பகுதி, நக்சலைட்டுகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதி ஆகும். சுக்மா, பிஜாப்பூர், தண்டேவா ஆகிய 3 மாவட்டங்களில் இந்த வனப்பகுதி பரந்து விரிந்துள்ளது. இதற்கிடையே, நேற்று முன்தினம், பிஜாப்பூர், சுக்மா மாவட்ட வனப்பகுதிகளில் பாதுகாப்பு படையினர் நக்சலைட்டுகளுக்கு எதிரான மாபெரும் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.

சி.ஆர்.பி.எப்., அதன் ‘கோப்ரா’ கமாண்டோ படை, மாவட்ட ரிசர்வ் படை, சிறப்பு அதிரடிப்படை ஆகியவற்றை சேர்ந்த 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர்கள் இதில் ஈடுபட்டனர். பிஜாப்பூர் மாவட்டத்தில் தரம், உசூர், பாமெட், சுக்மா மாவட்டத்தில் மின்பா, நர்சாபுரம் ஆகிய 5 இடங்களில் இருந்து தனித்தனி குழுக்களாக புறப்பட்டனர்.

இவற்றில், தரம் பகுதியில் இருந்து புறப்பட்ட குழுவினர், ஜோனாகுடா அருகே ஒரு குறிப்பிட்ட இடத்தை நெருங்கியபோது அங்கே மறைந்திருந்த நக்சலைட்டுகள், சரமாரியாக துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் எதிர்த்தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பாதுகாப்பு படையினர் 22 பேர் உயிரிழந்தனர். நக்சலைட்டுகள் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 22 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, துப்பாக்கிச்சண்டையில் மாவோயிஸ்டுகள் தரப்பிலும் 12- 20 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. உயிரிழந்தவர்களின் சடலங்களை மாவோயிஸ்டுகள் டிராக்டரில் வந்து அடர் வனப்பகுதிக்கு எடுத்துச்சென்றதாக அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில், நக்சலைட்டுகள் – பாதுகாப்பு படையினர் இடையே மோதல் நடந்த சுக்மா-பிஜாப்பூர் எல்லையின் ஜோனாகுடாவில் உள்ள காட்டுப்பகுதியை உள்துறை மந்திரி அமித்ஷா இன்று நேரில் பார்வையிடுகிறார். இதற்காக, அமித்ஷா இன்று சத்தீஷ்கார் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். முன்னதாக, நக்சலைட்டுகளுக்கு சரியான நேரத்தில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோதல் நடைபெற்ற இடத்தை உள்துறை மந்திரி இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ள நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது. இந்த பயணத்தின்போது நக்சலைட்டுகள் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாதுகாப்பு படையினரையும் அமித்ஷா இன்று சந்திக்கிறார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.