Breaking News
கவர்னரை இன்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் மு.க ஸ்டாலின்

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்க இருக்கிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்-அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார். முதல்-அமைச்சராக பொறுப்பேற்க இருப்பவர் முறைப்படி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி அக்கட்சியின் சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட வேண்டும். அதன் பின்னர் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கவேண்டும். இதுதான் சட்டமன்ற நடைமுறை ஆகும்.

அந்தவகையில் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று மாலை நடந்தது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் க.பொன்முடி, ஐ.பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் 125 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். மேலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 8 பேரும் பங்கேற்றனர். அந்தவகையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 133 பேர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டம் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கியது. இதில் சட்டமன்ற தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான கடிதத்தில் 133 பேரும் கையெழுத்திட்டனர். அதனைத்தொடர்ந்து பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்மொழிந்திட, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வழிமொழிந்திட சட்டமன்ற தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து Oஎம்.எல்.ஏ.க்கள் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ.க்கள் அமர ஏதுவாக சமூக இடைவெளியில் நாற்காலிகள் போடப்பட்டு் இருந்தது.

அதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதன் பின்னர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சட்டமன்ற தி.மு.க. தலைவராக, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்து கையெழுத்திட்ட கடிதத்தை எடுத்துக்கொண்டு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு மு.க.ஸ்டாலின் செல்கிறார். அங்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.

வருகிற 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்க இருக்கிறார். கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக கவர்னர் மாளிகை வளாகத்திலேயே எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற இருக்கிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.