Breaking News
வேலூர்: கனமழையால் வீடு இடிந்து விழுந்து விபத்து – குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
வேலூர் ,
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அம்மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் பலத்த மழை கொட்டியது. இதனால் பேர்ணாம்பட்டு ரங்கம்பேட்டை கானாற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் குல்ஷார் வீதி , அஜிஜியா வீதிகளில் கானாற்று வெள்ளம் புகுந்தது.
இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் அந்த பகுதியில் உள்ள பள்ளிவாசல், மசூதி மற்றும் பள்ளிக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர் மழை பெய்து வருவதால் அஜிஜியா வீதியில் உள்ள பொதுமக்கள் மாடிகளில் தங்கினர்.
இந்த வீதியிலுள்ள யுனானி வைத்தியர் மர்கூப் அஸ்லாம் அன்சாரி என்பவருடைய மனைவி அனிஷா பேகம் (வயது 63)மற்றும் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த வீட்டின் மாடியில் ஆசிரியை கவுசர் வயது 45 அவரது மகள் மகபூப் தன்ஷிலா( 27) ஆகியோர் வசித்து வந்தனர்.
இதற்கிடையில், நேற்று இரவு பலத்த மழை பெய்து தெருவில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் காரணமாக வாடகைக்கு குடியிருந்த கவுசர் மற்றும் அவருடைய மகள் ஆகியோர் அனுஷா பேகம் வீட்டில் வந்து தங்கினர். மேலும் அக்கம் பக்கத்தினரும் அந்த வீட்டிற்கு வந்து தங்கி உள்ளனர். குழந்தைகள் உள்பட மொத்தம் 13 பேர் அந்த வீட்டில் நேற்று இரவு படுத்து தூங்கினர்.
இந்நிலையில், கனமழை காரணமாக அந்த வீடு இன்று அதிகாலை 6 மணிக்கு திடீரென முழுவதுமாக இடிந்து விழுந்தது. இதனால், வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கினர். பயங்கர சத்தத்துடன் வீடு இடிந்ததால் அந்த பகுதி பொதுமக்கள் வெளியே ஓடி சென்று பார்த்தனர். அப்போது வீடு இடிந்து தரைமட்டமாகி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அங்கிருந்த பொதுமக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி 4 குழந்தைகள் உள்பட மொத்தம் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பேர்ணாம்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் காயமடைந்த 4 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.