மனைவிக்கு காரில் பிரசவம் பார்த்த கணவர்… உலகின் முதல் டெஸ்லா குழந்தை…!
பென்சில்வேனியா,
டெஸ்லா காரில் பயணித்த போது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் காரை ஆட்டோ பைலட் முறைக்கு மாற்றி கணவர் பிரசவம் பார்த்த சம்பவம் பென்சில்வேனியாவில் நிகழ்ந்துள்ளது.
டெஸ்லா நிறுவனம் உலக அளவில் ஆட்டோமொபைல் துறையில் முன்னணியில் உள்ளது.இதன் நிறுவனரான எலான் மஸ்க் உலக கோடீஸ்வரர்களில் ஒருவர் ஆவார். டெஸ்லா நிறுவனத்தின் கார்கள் அனைத்தும் உலககெங்கும் புகழ்பெற்றவை. பல லட்சம் , மற்றும் கோடிகள் மதிப்புள்ள டெஸ்லா நிறுவனத்தின் கார்களில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளது.
அதில் ஆட்டோ பைலட் (தன்னியக்க பைலட்) முறையானது டெஸ்லா கார்களில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இதனால் கார்கள் ஓட்டுனர்கள் இயக்காமல் தானாகவே இயங்கும் என்றாலும், ஓட்டுநர் இருக்கையில் யாராவது அமர்ந்திருக்கும் போது மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்துமாறு டெஸ்லா நிறுவனம் பரிந்துரைக்கிறது.
டெஸ்லா நிறுவனத்தின் இந்த அம்சம் ஏற்கனவே பல ஓட்டுநர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. அதுமட்டுமின்றி தற்போது டெஸ்லா நிறுவனத்தின் கார் ஒரு பெண் தனது குழந்தையைப் பெற்றெடுக்க உதவியுள்ளது.
பென்சில்வேனியா சேர்ந்த தம்பதி கீட்டிங் ஷெர்ரி-யிரான் ஷெர்ரி. இவர்களுக்கு 3 வயது ரபா என்ற மகன் உள்ளான். யிரான் ஷெர்ரி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் இவர்கள் குடும்பத்துடன் தங்கள் டெஸ்லா காரில் பயணித்துள்ளனர். அப்போது யிரான் ஷெர்ரிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் உடனே கணவர் கீட்டிங் ஷெர்ரி காரில் மருத்துமனை நோக்கி வேகமாக சென்றார். அப்போது அவர்களது கார் போக்குவரத்து நெரிசலால் சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் அவர்கள் மருத்துவமனை செல்ல தாமதத்தை தம்பதி உணர்ந்தனர். இதனால் கணவர் கீட்டிங் ஷெர்ரி காரை ஆட்டோ பைலட் முறைக்கு மாற்றி தனது மனைவியின் பிரசவத்திற்கு உதவியுள்ளார்.பின்னர் டெஸ்லா காரில் இவர்களுக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது.
இது குறித்து கீட்டிங் ஷெர்ரி கூறும்போது ,”டெஸ்லா காரின் தன்னியக்க பைலட்டின் அற்புதமான வடிவமைப்பிற்கு டெஸ்லா நிறுவன பொறியாளர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம் ” என தெரிவித்துள்ளார்.