Breaking News
கோலாலம்பூர்,
பருவநிலை மாற்றம் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் முறை தவறிப் பெய்யும் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு மட்டும் ஜெர்மனி, சீனா உள்ளிட்ட நாடுகளில் மிக மோசமான வெள்ளம் ஏற்பட்டது.
இந்நிலையில் மலேசியாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் வரலாறு காணாத கனமழையால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மலேசியாவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவமழை காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது என்பது வழக்கமான ஒன்று ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அங்கு அளவுக்கு அதிகமாகக் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு நாடு முழுவதும் மிக மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளத்தில் சிக்கி குறைந்தபட்சம் 8 பேர் வரை உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது ராணுவம் மற்றும் பிற பாதுகாப்புப் படைகளின் உதவியுடன் மீட்புப் பணிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மலேசியாவில் அதிக மக்கள் வசிக்கும் பகுதியாகவும் அந்நாட்டின் பணக்கார மாநிலமாகவும் கருதப்படும் சிலாங்கூரில் தான் மிக மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி வெள்ளத்தால் சிலர் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் அங்குள்ள வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்களில் சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது. அவர்களைப் படகுகள் மூலம் மீட்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த வெள்ளப்பெருக்கால், மலேசியாவின் கிழக்குக் கடற்கரையை ஒட்டிய பஹாங் மாநிலம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு வசித்த  34,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மேலும் சிலாங்கூர் மாநிலத்தில் இருந்து 24,000 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.