Breaking News
குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விபத்து: ரூ.1 லட்சம் நிவாரணம்; முதல்-அமைச்சர் அறிவிப்பு
சென்னை,
சென்னை திருவொற்றியூரில் உள்ள அரிவாக்குப்பத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்ட‌டம் இன்று காலை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தினால் 24 வீடுகள் தரைமட்டமாகின.
இந்த குடியிருப்பில், இரவு நேரத்தில் கட்டடத்தில் விரிசல் விழுந்துள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறிய நிலையில், குடிசைமாற்று வாரிய குடியிருப்பு இன்று காலை 10.30 மணியளவில் இடிந்து விழுந்தது. மக்கள் முன்னரே வெளியேறியதால் பெரிய அளவில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில், பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவொற்றியூரில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினால் கட்டப்பட்ட பழைய குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 24 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்து அதனால் மக்கள் பாதிப்படைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன்.
விபத்து நடந்த பகுதிக்கு உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அமைச்சர் தா.மோ.அன்பரசனை அனுப்பி வைத்து, விபத்தில் வீடிழந்த குடும்பத்தினருக்கு உடனடியாக மாற்று குடியிருப்புகள் வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன். பாதிக்கப்பட்ட மக்கள், மீண்டும் புதிய வாழ்க்கையைத் தொடங்க 24 குடும்பங்களுக்கும் தலா ரூபாய் ஒரு லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இதுபோன்ற விபத்து ஏற்படாத வகையில் பழைய குடியிருப்புகளின் விபரங்களைச் சேகரிக்கவும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளேன்” என்று அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.