சாலை, தண்டவாளத்தில் இயங்கும் வாகனம் அறிமுகம்
டோக்கியோ:கிழக்காசிய நாடான ஜப்பானில் சாலை மற்றும் தண்டவாளம் ஆகியவற்றில் இயங்கும் வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ஜப்பான் நாட்டின் கையோ நகரில், சாலை மற்றும் தண்டவாளத்தில் இயங்கும் வாகனம் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வாகனம் மினி பஸ் வடிவத்தில் உள்ளது.
இது சாலையில் செல்லும் போது டயர் வாயிலாக செல்கிறது. தண்டவாளத்தில் செல்லும் போது டயர்கள் மேலே துாக்கப்பட்டு, இரும்பு சக்கரங்கள் தண்டவாளத்தில் அமர்கின்றன. இரட்டை முறையில் இயங்கும் இந்த வாகனத்தை ஆஷா கோஸ்ட் ரயில்வே நிறுவனம் தயாரித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி ஷிகேகி மியூரா கூறியதாவது:இந்த வாகனம் போக்குவரத்து வசதி குறைந்த கிராமங்கள் மற்றும் முதியவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். அவர்கள் இந்த வாகனத்தில் ஏறி, அருகிலுள்ள நகரங்களுக்கு வந்த பின், ரயிலில் மாறுவதற்காக சிரமப்பட வேண்டியதில்லை.
|
இந்த வாகனமே ரயிலாக மாறி இயங்கும். முதற்கட்டமாக தெற்கு ஜப்பானில் உள்ள ஷிகோகு தீவில் இந்த வாகனம் இயக்கப்படுகிறது. சாலையில் மணிக்கு 60 கி.மீ., தண்டவாளத்தில் 100 கி.மீ., வேகத்திலும் செல்லும் இந்த வாகனம் டீசலில் இயங்குகிறது.இவ்வாறு அவர் கூறினார்.