ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி ஒரு மாத பரோலில் விடுவிப்பு
வேலூர்,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவர் மனைவி நளினி பெண்கள் சிறையிலும் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்துவருகிறார்கள். இவர்கள் இருவர் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்யக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்த சூழலில், உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் தன்னை அருகிலிருந்து கவனித்துக்கொள்வதற்காகத் தன் மகள் நளினியை பரோலில் விடுவிக்க வேண்டும் என்று அவர் தாயார் பத்மா, சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, நளினிக்கு பரோல் கொடுக்க தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்தது. இதனை தொடர்ந்து அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது
இந்நிலையில் வேலூர் பெண்கள் சிறையிலிருக்கும் நளினி ஒரு மாத பரோலில் இன்று வெளியே வந்துள்ளார். முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி ஒரு மாத பரோலில் நளினி வெளியே வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.