Breaking News
ரஷியா-உக்ரைன் போர் : சமையல் எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு; லிட்டருக்கு ரூ.40 அதிகரிப்பு
சென்னை:
உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையே நடந்து வரும் போர் காரணமாக, இந்தியாவில்  பல பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
உலக அளவில் சமையலுக்கு பயன்படுத் தக்கூடிய சூரியகாந்தி எண்ணெயை உக்ரைன் நாடு அதிகளவில் உற்பத்தி செய்து வழங்குகிறது. 80 சதவீதம் எண்ணெய் அந்த நாட்டில் இருந்து இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளுக்கு கப்பல் மூலம் வினியோகிக்கப்படுகிறது.
ரஷியா-உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருவதால் சமையல் எண்ணெய் ஏற்றுமதியில் தடை ஏற்பட்டுள்ளது. போர் தொடங்குவதற்கு ஒருவாரத்துக்கு முன்பே சமையல் எண்ணெய் விலை உயரத் தொடங்கியது.
கொரோனா பாதிப்பு காரணமாக சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு 150 ரூபாயை தாண்டியுள்ளது. தற்போது திடீரென சூரியகாந்தி எண்ணெய் விலை நூறு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
போருக்கு முன்பு வரை சூரியகாந்தி எண்ணெய் 1 லிட்டர் ரூ.140-க்கு விற்கப்பட்டது. போர் தொடங்கிய பின்னர் இந்த விலை படிப்படியாக அதிகரித்தது. ஒரு லிட்டர் பாக்கெட் ரூ.165 முதல் 178 வரை தற்போது விற்கப்படுகிறது.
சில்லரை விற்பனையில் இதன் விலை மேலும் உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் ரூ.196 வரை விற்கப்படுகிறது. இதே போல பாமாயில் விலையும் அதிகரித்துள்ளது. ரூ.125-க்கு விற்கப்பட்ட பாமாயில் ரூ.170 ஆக உயர்ந்துள்ளது.
பாமாயில் மலேசியா, இந்தோனேசியா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த போரினால் பாமாயில் ஏற்றுமதியை இந்த நாடுகள் குறைத்துள்ளன. இதுவே இந்த விலை ஏற்றத்துக்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் சமையல் எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் குடும்பத்தலைவிகள் கவலை அடைந்துள்ளனர். லிட்டருக்கு ரூ.40 வரை விலை உயர்ந்திருப்பதால் சமையல் எண்ணை பயன்பாட்டை குறைத்து வருகிறார்கள்.இதனால் கடைகளில் சமையல் எண்ணெய் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது.
இதுகுறித்து கொடுங்கையூரில் உள்ள மளிகை கடை உரிமையாளர் பொன்ராஜ் கூறியதாவது:-
உக்ரைன் போர் தொடங்குவதற்கு முன்பே சமையல் எண்ணெய் விலை அதிகரித்தது. தற்போது போர் தீவிரம் அடைந்து வருவதால் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து எண்ணெய் விலைகளும் உயர்ந்துள்ளன.
குறிப்பாக சமையல் எண்ணெய் ரூ.40 வரை உயர்ந்திருப்பதால் விற்பனை பாதித்துள்ளது. பொதுவாக மளிகைகடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் தற்போது வியாபாரம் குறைந்துள்ளது.
மார்ச் மாதம் என்பதால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவேண்டிய நிலை ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்குவதை குறைத்துள்ளனர். அடுத்தமாதம் வரை இந்த பாதிப்பு இருக்கும்.
இதற்கிடையில் எண்ணெய் விலை பல மடங்கு அதிகரித்து வருவதால் விற்பனை சரிந்துள்ளது. மேலும் கோதுமை விலையும் அதிகரித்துள்ளது. 50 கிலோ மூட்டைக்கு ரூ,100 உயர்ந்துள்ளது. இதனால் மைதா, ரவை ஆகியவற்றின் விலை கிலோவிற்கு ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.