இலங்கையில் பதற்றம்: அதிபர் மாளிகை முற்றுகை; பல இடங்களில் ஊரடங்கு அமல்..!!
கொழும்பு,
இலங்கையில் இப்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கூட விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. கொரோனா காரணமாகப் பாதிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரம் இன்னும் மேம்படவில்லை. இதனால் இலங்கையில் உணவு பற்றாக்குறை எரிபொருள் தட்டுப்பாடு ஆகியவையும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்
பல்வேறு காரணங்களால் இலங்கை நாட்டின் அந்நிய செலாவணி மிக மோசமாக உள்ளது. இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
உணவுப் பற்றாக்குறை மட்டுமின்றி, அங்கு மின்சாரத்திற்கும் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை நாட்டில் பல்வேறு இடங்களில் 13 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை மின்தடை ஏற்பட்டுள்ளது.
இதனால் இலங்கையில் அதிபருக்கு எதிராக போராட்டம் வலுக்க தொடங்கி உள்ளது. இந்த சூழலில் அதிபர் இல்லத்தை முற்றுகையிட மக்கள் கூட்டம் முயன்றதால், அதிபர் இல்லம் முன் போலீசார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் இராணுவ வண்டி தீ வைத்து கொழுத்தப்பட்டது.
இந்நிலையில் கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு, நுகேகொடை ஆகிய பகுதிகளில் மறு அறிவிப்பு வரும் வரை போலீசார் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளனர். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.