Breaking News
நரிக்குறவர் இன மக்கள் அளித்த விருந்து… விரும்பி சாப்பிட்ட முதல்-அமைச்சர்
சென்னை,
கடந்த மாதம் ஆவடி பகுதியில் நரிக்குறவர் இனைத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியில் உள்ள அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தருமாறு முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அதனை தொடர்ந்து அவர்களிடம் வீடியோ கால் மூலம் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களது பகுதிக்கு நேரில் வருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
அதனை நிறைவேற்றும் வகையில் இன்று சென்னை திருமுல்லைவாயல் மற்றும் ஆவடி பகுதிகளில் உள்ள நரிக்குறவர் இன மக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து அவர்களிடம் கலந்துரையாடுகிறார். இதன்படி திருமுல்லைவாயல் பகுதிக்குச் சென்ற முதல்-அமைச்சர், அங்குள்ள நரிக்குறவர் குடியிருப்பு பயனாளிகளுக்கு குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை, சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அங்குள்ள பொதுமக்கள், மாணவ, மாணவிகளை சந்தித்து அவர்களிடம் முதல்-அமைச்சர் கலந்துரையாடினார். பலர் முதல்-அமைச்சருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதனை தொடர்ந்து ஆவடி பகுதியில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள மக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.
அந்த பகுதியைச் சேர்ந்த தர்ஷிணி, பிரியா, திவ்யா அகிய மாணவிகளுடன் கலந்துரையாடிய முதல்-அமைச்சர், அவர்களது வீட்டில் உணவு மற்றும் தேநீர் அருந்தினார். ஏற்கனவே காணொலி வாயிலாக மாணவிகளிடம் பேசிய போது, “உங்கள் வீட்டிற்கு வந்தால், உணவு தருவீர்களா?” என முதல்-அமைச்சர் கேட்டிருந்தார். அதன்படி இன்று அவர்களது வீட்டிற்குச் சென்ற அவர், அவர்கள் அளித்த உணவை விரும்பி சாப்பிட்டார்.
இதனை தொடர்ந்து ஆவடி பகுதியில் உள்ள நறிக்குறவர் இன பயனாளிகளுக்கு குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.