பொருளாதார நெருக்கடி: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா என தகவல்
கொழும்பு,
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதோடு, பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடும் நிலவுகிறது. இதனால், மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அன்னிய செலவாணி பற்றாக்குறையால், எரிபொருள் இறக்குமதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கடுமையான மின் தட்டுப்பாடு, எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு என இலங்கை மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
இலங்கையின் இந்த வீழ்ச்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ராஜபக்சே சகோதரர்களே காரணம் என்று அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ராஜபக்சே பதவி விலகக்கோரி தொடர் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இன்று கொழும்புவில் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் போராட்டக்காரர்கள் 23- பேர் காயம் அடைந்துள்ளனர். இதனால், இலங்கையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்ட நிலையில் இலங்கை முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2019- ஆம் ஆண்டு முதல் இலங்கை பிரதமராக இருந்து வரும் மகிந்த ராஜபக்சே பதவியில் இரருந்து விலகியுள்ளார்