Breaking News
ஆடிட்டர் மனைவியுடன் கொலை; நேபாளத்திற்கு தனிப்படை விரைகிறது: செங்கல்பட்டு மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை

சென்னை: ஆடிட்டர் தம்பதியை ரூ.40 கோடி பணத்திற்கு கொடூரமாக அடித்து கொலை செய்து பண்ணை வீட்டில் புதைத்த வழக்கில், ஆடிட்டர் தம்பதியின் உடல் அவர்களின் உறவினர்கள் முன்பு இன்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெறுகிறது. மேலும், குற்றவாளியின் தந்தையை பிடிக்க  தனிப்படை போலீசார் நேபாளம் செல்கின்றனர். சென்னை மயிலாப்பூர், பிருந்தாவன் கார்டன் பகுதியை சேர்ந்த வயதான தம்பதி  ஸ்ரீகாந்த் (60). ஆடிட்டர். இவரது மனைவி அனுராதா (55). இவர்கள் இருவரும் அமெரிக்காவில் இருக்கும் தங்களது பிள்ளைகளை பார்ப்பதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சென்றுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை துபாய்  வழியாக, ஆடிட்டர் தம்பதி சென்னை திரும்பினர்.

அவர்களிடம் கடந்த 11 ஆண்டுகளாக கார் டிரைவராக வேலை செய்து வரும் நேபாளத்தை சேர்ந்த பதம்லால் கிஷன்(எ) கிருஷ்ணா என்பவர் வீட்டிற்கு அழைத்து சென்றார். பிறகு அமெரிக்காவில் இருந்து ஆடிட்டர் மகன் சஸ்வத் போன் செய்த போது, அவரது தந்தை ஸ்ரீகாந்த் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. உடனே கார் டிரைவர் கிருஷ்ணாவிற்கு போன் செய்துள்ளார். அதற்கு அவர் சரியாக பதில் அளிக்காமல் போன் இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் அடையாறு இந்திராநகர் பகுதியில் வசித்து வரும் உறவினர் ரமேஷ் என்பவருக்கு தகவல் அளித்து வீட்டிற்கு சென்று பார்க்கும் படி சஸ்வத் கூறியுள்ளார். அதன்படி ரமேஷ் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீடு பூட்டப்பட்டிருந்தது. அதைதொடர்ந்து சம்பவம் குறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் உறவினர் ரமேஷ் புகார் அளித்தார்.

அதன்படி போலீசார் விசாரணை நடத்திய போது, கார் டிரைவர் கிருஷ்ணா தனது கூட்டாளியான மேற்கு வங்கம் மாநிலம் டார்ஜிலிங் பகுதியை சேர்ந்த ரவி ராய் என்பவருடன் சேர்ந்து ஆடிட்டர் தம்பதியை கொலை செய்து உடலை மாமல்லபுரம் நெமிலிச்சேரி அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் உள்ள ஆடிட்டரின் பண்ணை வீட்டில் குழி தோண்டி புதைத்தது தெரியவந்தது. மேலும், ஆடிட்டர் வீட்டில் இருந்து தங்க நகைகள் கொள்ளையடித்து கொண்டு கார் மூலம் நேபாளம் தப்பி சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

உடனே போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில் மயிலாப்பூர் துணை கமிஷனர் திஷா மிட்டல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், ஆந்திரா போலீசார் உதவியுடன் ஆந்திரா மாநிலம் ஒங்கோல் சுங்கச்சாவடியில் கார் டிரைவர் மற்றும் அவரது நண்பரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து 9 கிலோ தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள், 70 கிலோ வெள்ளி பொருட்கள், கொலைக்கு பயன்படுத்திய உருட்டு கட்டை, கத்தி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் கைது செய்யப்பட்ட கார் டிரைவர் கிருஷ்ணா மற்றும் அவரது கூட்டாளி ரவி ராயிடம் நடத்திய விசாரணையில், ஆடிட்டர்  நிலம் விற்பனை தொடர்பாக ரூ.40 கோடி பணத்தை தனது வீட்டில் வைத்திருப்பதாக அமெரிக்கா செல்ல வீட்டில் இருந்து விமானநிலையத்திற்கு காரில் சென்றபோது செல்போனில் பேசியுள்ளார். அதை கேட்டுக்கொண்டிருந்த கார் டிரைவர் ஆடிட்டர் தம்பதியை கொலை செய்து ரூ.40 கோடி பணத்தை கொள்ளையடித்து கொண்டு சொந்த நாட்டிற்கு சென்று விடலாம் என்று திட்டமிட்டுள்ளார்.

இதற்கிடையே அமெரிக்காவில் இருந்து ஆடிட்டர் தம்பதி நேற்று முன்தினம் அதிகாலை சென்னை திரும்பினர். பின்னர் ஏற்கனவே திட்டமிட்டப்படி மயிலாப்பூர் வீட்டிற்கு ஆடிட்டர் தம்பதி வந்த உடன் தனது நண்பர் ரவிராய் உதவியுடன் உருட்டுக்கட்டையால் அடித்து ரூ.40 கோடி பணம் குறித்து கேட்டுள்ளனர். ஆனால் தங்களிடம் பணம் இல்லை என்று கூறியும் அவர்களை கொடூரமாக கொலை செய்துள்ளனர். காரில் உடல்களை ஏற்றிக் கொண்டு மாமல்லபுரத்தில் உள்ள காந்த்தின் பண்ணை வீட்டில் புதைத்துள்ளனர். பிறகு லாக்கரில் இருந்த ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள், அமெரிக்காவில் இருந்து வாங்கி வந்த விலை உயர்ந்த செல்போன், லேப்டாப்புகளை எடுத்து கொண்டு சென்றது தெரியவந்தது.

பிறகு கைது செய்யப்பட்ட 2 குற்றவாளிகளை பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று ஆடிட்டர் தம்பதியின் உடலை நேற்று போலீசார் வட்டாட்சியர் முன்னிலையில் பள்ளத்தை தோண்டி எடுத்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர்.  அமெரிக்காவில் இருந்து கொலையான ஆடிட்டரின் மகன் சஸ்வத் மற்றும் மகள் சுனந்தா ஆகியோர் இன்று வருகின்றனர். அதே நேரத்தில் அவர்களின் உறவினர்கள் முன்னிலையில் இன்று மதியம் ஆடிட்டர் தம்பதியின் பிரேத பரிசோதனை நடைபெறும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார் டிரைவர் கிருஷ்ணாவின் தந்தை லால் சர்மா கடந்த 20 ஆண்டுகளாக சூளேரிக்காடு பண்ணை வீட்டில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இவர் ஆடிட்டரின் நம்பிக்கையான நபர் என்பதால் அவரிடம் பண்ணை வீட்டின் முழு பொறுப்பும் ஒப்படைத்திருந்தார். அதேநேரம் ஆடிட்டர் அமெரிக்கா சென்று இருந்த நேரத்தில் அதுவும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு லால் சர்மா தனது மனைவியுடன் நேபாளம் சென்றுள்ளார். இதனால் ஆடிட்டர் தம்பதி கொலை செய்வது குறித்து முன்கூட்டியே லால் சர்மாவுக்கு தெரியும் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதனால் தான் அவர் நேபாளத்திற்கு சென்றுள்ளார். எனவே நேபாளத்தில் உள்ள கார் டிரைவர் கிருஷ்ணாவின் தந்தை லால் சர்மா மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்காக நேபாளத்திற்கு தனிப்படை ஒன்று செல்ல இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கொலையில் பலருக்கு தொடர்பு இருப்பது குற்றவாளிகள் இரண்டு பேரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் இருந்து ஆடிட்டரின் மகன் மற்றும் மகள் வந்த பிறகு தான் இந்த கொலை குறித்து முழுமையான தகவல்கள் வெளியே வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.