Breaking News
அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை காலத்தின் கட்டாயம்- தீர்மானங்களை விளக்கி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு.

சென்னை:

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை ஏன் வேண்டும்? என்பது பற்றி முன்னாள் அமைச்சரான ஆர்.பி.உதயகுமார் விளக்கி பேசினார். அதன் விவரம் வருமாறு:- அம்மாவின் மறைவிற்கு பிறகு கழகத்தில் ஏற்பட்ட பிளவுகளை சரி செய்து, ஒன்றுபட்ட ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை உருவாக்கிட வேண்டி பொதுச்செயலாளர் பொறுப்பை ரத்து செய்து கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமை கொண்டு வரப்பட்டது. பொதுச்செயலாளர் என்ற அதிகாரம் மிக்க தெளிவான, வலிமையான தலைமை இல்லாமல், இரட்டைத் தலைமை ஏற்பட்ட பிறகு நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முடிவு எடுப்பதிலும், செயல்படுத்துவதிலும் பல்வேறு சங்கடங்கள், தாமதங்கள் ஏற்பட்டன.

இதனால் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையேயும், பொதுமக்கள் இடையேயும் மிகப்பெரிய ஏமாற்றமும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியாக உள்ள இந்தக் காலத்தில் தி.மு.க. அரசையும், கட்சியையும் வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றால் தெளிவான மற்றும் வலிமையான ஒற்றைத் தலைமை என்பது காலத்தின் கட்டாயமாகும். தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் எண்ணமும், பொதுமக்களின் எதிர்பார்ப்பும் அதுவே ஆகும். கடந்த 14.6.2022 அன்று தலைமைக் கழகத்தில் நடைபெற்ற தலைமைக் கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், இரட்டைத் தலைமையால் கழகத்துக்கு நிர்வாக சிக்கல்களும், சங்கடங்களும், உடனுக்குடன் முடிவு எடுப்பதில் காலதாமதமும் ஆவதால், ஒரு வலிமையான ஒற்றைத் தலைமை தேவை என்ற ஆலோசனையும் வழங்கப்பட்டது.

23.6.2022 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, அடுத்த பொதுக்குழுவிற்கான தேதியை அந்தப் பொதுக்குழுவிலேயே அறிவித்து, அடுத்து கூடும் பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை கடிதமும் கொடுக்கப்பட்டது. நூறு ஆண்டுகள் அ.தி.மு.க. நிலைத்து நின்று மக்கள் பணியாற்றும் என்ற அம்மாவின் வாக்கு நிறைவேற வேண்டும் என்றால், மீண்டும் புரட்சித் தலைவர் ஆட்சி, புரட்சித் தலைவி அம்மா ஆட்சி மலர வேண்டும் என்றால் வலிமையான ஒற்றைத் தலைமை உருவாக்கப்பட வேண்டும்.

எனவே, கழக அடிப்படை உறுப்பினர்களின் விருப்பத்திற்கும், எதிர்பார்ப்புக்கும், கோரிக்கைக்கும் ஏற்ப, பொதுமக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் கழக அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் கழக பொதுச்செயலாளர் பொறுப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது. கழக பொதுச்செயலாளர் என்பது கழகத்தின் உச்சபட்ச அதிகாரம் உள்ள பொறுப்பாகும். அவர் கழகத்தை வழிநடத்தக் கூடியவர் ஆவார். கழகத்தையும், தொண்டர்களையும் வழிநடத்தக் கூடிய தலைமைப் பொறுப்புக்கு போட்டியிடுபவர்களுக்கு முறையான தகுதிகள் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

மேலே கூறப்பட்டுள்ளவைகளைக் கருத்தில்கொண்டு, கழகத்தின் சட்ட திட்ட விதிமுறைகளில் தேவையான திருத்தங்கள் பின்வருமாறு செய்யப்படுகின்றன. * கழகத்தின் சட்ட திட்ட விதிமுறைகளில், விதி எண். 20 ரத்து செய்யப்படுகிறது. * கழகத்தின் சட்ட திட்ட விதிமுறைகளில், எங்கெல்லாம் “கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர்” என்ற சொற்றொடர்கள் வருகின்றதோ அங்கெல்லாம் அவற்றிற்கு பதிலாக கழக பொதுச்செயலாளர் என்றும் எங்கெல்லாம் கழக துணை ஒருங்கிணைப்பாளர் என்று வருகிறதோ அங்கெல்லாம் “கழக துணை பொதுச்செயலாளர்” என்றும் மாற்றி அமைக்கப்படுகிறது. இவ்வாறு உதயகுமார் பேசினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.