Breaking News
சின்னசேலம் பள்ளியில் மாணவி பலியான விவகாரம் அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: கள்ளக்குறிச்சி கலெக்டர், எஸ்.பி. அதிரடி இடமாற்றம்

சென்னை:

சின்னசேலம் அருகே பள்ளி மாணவியின் மரணம் குறித்து சந்தேகம் எழுப்பிய சிலர், பள்ளியை சூறையாடினர். இந்த சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது, குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து அந்த மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பியை மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி இறந்த சம்பவம் தொடர்பாக போராட்டக்காரர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17ம் தேதி) திடீர் கலவரத்தில் ஈடுபட்டனர். பள்ளிக்குள் புகுந்து சூறையாடினர். 10க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகளுக்கு தீ வைத்தனர். பள்ளியில் இருந்த பொருட்களை சூறையாடியதுடன், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தீ வைத்து கொளுத்தினர். போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதில் டிஐஜி, எஸ்பி உள்பட 50க்கும் மேற்பட்ட போலீசாரும் காயம் அடைந்தனர். இதையடுத்து ஏராளமான போலீசார் பள்ளி பகுதியில் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாணவி மரணம் தொடர்பாக பள்ளி முதல்வர், தாளாளர், செயலாளர், ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட 21 சிறுவர்கள் உள்பட 302 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 17ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தம் அளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. காவல்துறை விசாரணையின் முடிவில் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்’ என்றார்.

மேலும் உள்துறை செயலாளர் பணீந்திரரெட்டி, காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோரை உடனடியாக பள்ளி அமைந்துள்ள பகுதிக்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அவர்களும் சம்பவ இடத்துக்கு சென்று, முகாமிட்டு போராட்டத்தை கட்டுப்படுத்தினர். இதை தொடர்ந்து மாணவி மரணம் மற்றும் பள்ளியில் கலவரக்காரர்கள் நடத்திய போராட்டம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த விசாரணையில், கலவரக்காரர்கள் திட்டமிட்டு கலவரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் பலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளி கல்வித்துறை அமைச்சர்  மகேஷ் பொய்யாமொழி ஆகியோரையும் உடனடியாக கள்ளக்குறிச்சிக்கு விரையுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அவர்களும் பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். காயம் அடைந்த போலீசாரையும் மருத்துவமனைக்கு சென்று பார்த்தனர்.

இந்நிலையில், கொரோனா சிகிச்சை முடிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் காலை வீடு திரும்பினார். அவரை ஒரு வாரம் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து அவர் வீட்டில் இருந்தபடி, தொடர்ந்து அரசு பணிகளை கவனித்து வருகிறார். நேற்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் இருந்தபடியே, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணம் அடைந்தது, அதைதொடர்ந்து நடந்த கலவரம் குறித்து உயர் அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மகேஷ் பொய்யாமொழி, உள்துறை செயலாளர் பணீந்திரரெட்டி, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவஆசீர்வாதம், பள்ளி கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனையின்போது, ‘சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி குற்றவாளிகள் விரைவாக கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளி மாணவ – மாணவிகள் படிப்பில் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க கல்வி துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். பள்ளிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு விரைவில் சரி செய்யப்பட்டு மீண்டும் வழக்கம்போல் பள்ளி செயல்பட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கலவரத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து சமூகத்துக்கு அடையாளம் காட்ட வேண்டும்’’ என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் செல்வகுமார் ஆகியோரை அதிரடியாக பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில், வேளாண்மை துறை கூடுதல் இயக்குனர் ஷ்ரவன் குமார் ஜடாவத் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக இருந்த பி.என். ஸ்ரீதர், சென்னை – கன்னியாகுமரி தொழிலக நெடும்பாதை திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகர திருவல்லிக்கேணி துணை கமிஷனராக இருந்த பகலவன் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பியாக இருந்த செல்வகுமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மாணவி தற்கொலை விவகாரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்பி ஆகியோர் ஒரே நேரத்தில் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* தனியார் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி குற்றவாளிகள் விரைவாக கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
* பள்ளி மாணவ, மாணவிகள் படிப்பில் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.
* கலவரத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து சமூகத்துக்கு அடையாளம் காட்ட வேண்டும்.
* பள்ளிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு விரைவில் சரி செய்யப்பட்டு, மீண்டும்  வழக்கம்போல் பள்ளி செயல்பட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.