Breaking News
பறவை காய்ச்சலை தொடர்ந்து பன்றி காய்ச்சல்- கேரளாவில் 532 பன்றிகள் அழிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கேரள சுகாதாரத்துறை மற்றும் கால்நடை துறையினர் இணைந்து அந்த பகுதியில் சோதனை நடத்தினர். இதில் பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான கோழிகள் மற்றும் வாத்துக்கள் அழிக்கப்பட்டன.

மேலும் அங்கு உற்பத்தி செய்யப்பட்ட முட்டைகளை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து பண்ணைகள் உள்ள பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள பகுதிகளும் கண்காணிக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் ஆப்ரிக்கன் புளூ எனப்படும் பன்றி காய்ச்சல் பரவியது தெரியவந்தது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் அந்த பகுதியில் உள்ள பண்ணைகளில் ஆய்வு செய்தனர். இதில் ஒரு பண்ணையில் இருந்த 70 பன்றிகள் நோய் பாதிப்பு ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது.

இதுபற்றி தெரியவந்ததும் மாவட்ட நிர்வாகம் அவசர ஆலோசனை நடத்தியது. பின்னர் நோய் பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்ட பன்றிகளை உடனடியாக அழிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பண்ணைகளில் தற்போது 532 பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவற்றை இன்று அழிக்கும் பணி தொடங்கியது.

இதனை சுகாதாரத்துறையினரும், கால்நடை துறையினரும் இணைந்து மேற்கொண்டனர். மேலும் இந்த பகுதிகளில் அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.