Breaking News
தேர்தலுக்கு முந்தைய கடைசி முழு பட்ஜெட் எப்படி இருக்கும்?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கடைசி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தயாராகி வருகிறார்.

2023-34ம் நிதியாண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட், நாடாளுமன்ற மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக தாக்கல் செய்யும் 5-வது பட்ஜெட் இதுவாகும். கடந்த இரு ஆண்டுகளைப் போல இதுவும் காகிதமில்லா பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்படுகிறது.

மக்களவையில் லேப்டாப் உதவியுடன் பட்ஜெட் உரையை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முழுமையாக முடித்ததும், பட்ஜெட் விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். பட்ஜெட் மொபைல் ஆப்பை (Budget Mobile app) செல்போனில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் யார் வேண்டுமானாலும் பட்ஜெட் உரையை முழுமையாக பெறலாம்.

கடந்த அக்டோபர் 10-ம் தேதி பட்ஜெட் தயாரிப்புக்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி, பல கட்டங்களைக் கடந்து மத்திய பட்ஜெட் இறுதி வடிவம் பெற்றுள்ளது. வழக்கமான நடைமுறைகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கலாகிறது.

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய தயாராகும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முதல் கட்டமாக குடியரசுத் தலைவர் மாளிகை சென்று குடியரசுத் தலைவர் திரளவுபதி முர்முவை சந்தித்தார். அவருடன் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

நிதி அமைச்சகத்தில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு புறப்பட்ட போது பேசிய இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் விதத்தில் பட்ஜெட் இருக்கும் என்று குறிப்பிட்டதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

மத்திய பட்ஜெட் எப்படி இருக்கும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

வரவிருக்கும் பட்ஜெட் 2024 பொதுத்தேர்தலுக்கு முந்தைய நரேந்திர மோதி அரசின் முழு பட்ஜெட்டாக இருந்தாலும் அரசின் வருவாய் மற்றும் செலவினங்களைக் கருத்தில் கொண்டு, அது எளிய மக்களுக்கான பட்ஜெட்டாக இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

மோதி அரசின் ஆபத்தான நிதி நிலையைக் கருத்தில் கொண்டு, ஒருபுறம் ஏழைகளின் சமூகப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதற்கும் வளர்ச்சிக்கு ஆதரவான செலவினங்களை அதிகரிப்பதற்கும் மறுபுறம் பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைப்பதற்கும் இடையே செய்ய வேண்டிய கடினமான சமநிலைப்படுத்தும் பணி நிதியமைச்சருக்கு உள்ளது.

இந்தியாவின் பட்ஜெட் நிதிப் பற்றாக்குறை கடந்த பத்தாண்டுகளில் சராசரியாக 4-4.5 சதவிகிதம் இருந்த நிலையில், தற்போது 6.4 சதவிகிதமாக உள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் அரசாங்கத்தின் மொத்தக் கடன் இரண்டு மடங்காகியுள்ளதால், உணவு மற்றும் உரங்கள் மீதான மானியங்கள் நான்கில் ஒரு பங்காக குறைக்கப்படலாம் என்று ராய்ட்டர்ஸின் பொருளாதார நிபுணர்களின் கருத்துக்கணிப்பு கண்டறிந்துள்ளது. கொரோனா கால இலவச உணவு திட்டத்தையும் அரசாங்கம் ஏற்கெனவே நிறுத்திவிட்டது.

அதிகரித்து வரும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, அதாவது ஏற்றுமதியில் இருந்து அரசாங்கம் ஈட்டும் வருவாய்க்கும் இறக்குமதியில் செலவழிக்கும் தொகைக்கும் இடையே உள்ள வித்தியாசம், மற்றொரு சவாலாக உள்ளது.

பணப் பற்றாக்குறையை சிறப்பாக சமாளிக்க பட்ஜெட் அறிவிப்புகளைத் தாண்டி, தொடர்ச்சியான கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.