Breaking News
இந்தியாவுக்காக கால்பந்து விளையாடிய பௌலமி அதிகாரி: இன்று வறுமையால் உணவு டெலிவரி செய்யும் அவலம்

பௌலமி அதிகாரி அப்போது இரண்டாம் ஷிஃப்ட் வேலையின் நடுவே இருந்தார். அப்போது, சாமானியர்கள் குறித்துக் காணொளிகள் உருவாக்குவதை பொழுதுபோக்காகக் கொண்டிருக்கும் கொல்கத்தாவை சேர்ந்த அதிந்த்ரா சக்ரபர்ட்டி பௌலமியை நிறுத்தி சில கேள்விகளைக் கேட்டார்.

பௌலமி காலை 6 மணியிலிருந்து வேலை பார்க்கிறார். அதிகாலை ஒரு மணியளவில் அவர் தன் வேலையை முடிக்கலாம். ஆனாலும், உரையாடுவதற்கான அந்த வாய்ப்பை அவர் தவறவிடவில்லை.

சிவப்பு டி-ஷர்ட்டில் “ஜொமேட்டோ” ( “Zomato”) என்ற லோகோ, வெள்ளை எழுத்தில் அச்சிடப்பட்டிருந்தது. இந்தியாவின் மிகப்பெரிய உணவு விநியோக செயலி மூலம் உணவை டெலிவரி செய்வதுதான் தன்னுடைய வேலை என்கிறார் 24 வயதான பௌலமி. ஆனால், தன் ஆர்வம் முழுவதும் கால்பந்து விளையாட்டு மீதுதான் என்கிறார் அவர்.

16 வயதுக்கு உட்பட்டோருக்கான சர்வதேச போட்டிகளில் தன் நாட்டுக்காக முன்பு விளையாடினார் பௌலமி. ஆனால், அது அவர் மேற்கொண்டு முன்னெடுத்துச் செல்லப்படவில்லை. அவருடைய குடும்பம் பொருளாதார சுமைகளுக்கிடையே சிக்கிக்கொண்டது.

அதனால் பௌலமி வேலைக்குச் செல்ல வேண்டிய தேவை எழுந்தது. சிறிது நேரமே நீடித்த உரையாடலை முடித்துக்கொண்டு விடைபெற்ற அவர், தன் இருசக்கர வாகனத்தில் அடுத்த டெலிவரிக்காக கிளம்பிவிட்டார்.

மறுநாள் காலை இந்தக் காணொளி வைரலாகவே, மக்களுக்குப் பல கேள்விகள் எழுந்தன. கால்பந்து விளையாட்டில் நம்பிக்கைக்குரியவராக இருந்த இளம்பெண் எப்படி, மேற்கு வங்கத்தின் தலைநகரைச் சுற்றி உணவு விநியோகத்திற்காக உறங்காமல் தனது பெரும்பான்மையான நேரத்தைச் செலவிடுகிறார்?

பௌலமி அதிகாரியின் கதையைக் கேட்க அவர்கள் விரும்பினர்.

கொல்கத்தாவின் ஹூக்லி ஆற்றின் தெற்கே பௌலமி வளர்ந்த ஷிப்ராம்பூரின் குறைந்த வருமானம் கொண்ட பகுதியில் உள்ளவர்கள் அவரை ‘பல்டி’ என்று அழைக்கிறார்கள். இதற்கு “கடவுளின் குழந்தை”, “விலைமதிப்பற்ற பரிசு” என அர்த்தம்.

இரண்டு மாத குழந்தையாக இருந்தபோதே அவருடைய தாய் இறந்துவிட்டதால் தனது அத்தையின் கவனிப்பில் வளர்ந்தவர் பௌலமி. பகுதி நேர டாக்சி ஓட்டுநராக உள்ள அவருடைய தந்தை குடும்பத்தை நடத்தப் போராடினார்.

வருத்தமடைந்த பௌலமி, வழி கண்டுபிடித்த அத்தை

ஏழு வயது இருக்கும்போது, வீட்டுக்கு அருகே உள்ள மைதானத்தில் சிறுவர்கள் கால்பந்து விளையாடுவதைப் பார்த்தார் பௌலமி. அவர்களுடன் பௌலமி சேர்ந்துகொண்டார். அவர் ஷார்ட்ஸ் அணிந்திருந்ததால், பௌலமியும் ஆண் தான் என்று அந்தச் சிறுவர்கள் நினைத்துக்கொண்டனர்.

“ஆனால் நான் ஒரு பெண் என அவர்கள் அறிந்துகொண்டபோது, அந்தச் சிறுவர்களின் பெற்றோர் மைதான அலுவலர்களிடமும் அத்தையிடமும் புகார் செய்தனர். அவர்கள், ‘ஷார்ட்ஸ் அணிந்துள்ள ஒரு பெண் எப்படி ஆண் பிள்ளைகளுடன் சேர்ந்து கால்பந்து விளையாட முடியும்,’ எனக் கேட்டனர்”,” என்று பிபிசியிடம் கூறுகிறார் பௌலமி.

இதனால் பௌலமி வருத்தம் அடைந்தார். “கால்பந்து விளையாட வேண்டும் என நான் மிகவும் விரும்பினேன். அதனால், வீட்டில் தினமும் இதை நினைத்து அழுவேன்,” என்றார் பௌலமி.

அவருடைய கனவை ஆதரிக்க, தான் ஒரு வழியை கண்டுபிடிப்பதாக பௌலமியின் அத்தை கூறியிருக்கிறார். இதையடுத்து, தங்கள் பகுதியில் உள்ள அனிதா சர்க்கார் எனும் கால்பந்து பயிற்சியாளர் குறித்து பௌலமிக்கு தெரிய வந்திருக்கிறது.

அவருடைய வழிகாட்டுதலில் கொல்கத்தா கால்பந்து போட்டியில் பெண்கள் அணியில் விளையாடிய பௌலமி, தன் 12வது வயதில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணிக்குத் தேர்வானார்.

பௌலமி அதிகாரி

இதன்மூலம் நெருங்கிய நட்பு வட்டத்தை உருவாக்கிக்கொண்ட பௌலமிக்கு, அவர் கற்பனைகூட செய்து பார்க்காத பல ஆச்சர்யகரமான வாய்ப்புகள் கிடைத்தன.

அவருடைய குடும்பத்தினர் யாரும் விமானத்தில் பயணம் செய்தது இல்லை. ஆனால், பௌலமி கால்பந்து போட்டிக்காக மிகக் குறுகிய காலத்திலேயே தன் நெருங்கிய தோழிகளுடன் விமானத்தில் பயணம் செய்தார். தனக்குப் பிடித்த விளையாட்டை விளையாடினார்.

“இந்திய அணியின் ஜெர்சியை அணிந்துகொண்டு, என்னுடைய நாட்டுக்காக இளம் வயதிலேயே விளையாடியது என்னுடைய விளையாட்டு வாழ்க்கையிலேயே சிறந்த தருணம்,” என்கிறார் அவர்.

பௌலமி ,”இந்திய அணியின் ஜெர்சியை முதன்முறையாக அணிந்தபோது, மகிழ்ச்சியில் எனக்கு மயிர்க்கூச்செறிந்தது,” என்கிறார்.

2013இல் அவர் இலங்கைக்குப் பயணம் செய்தார், அங்கு தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் பெண்கள் ஜூனியர் சாம்பியன்ஷிப்புக்கான தகுதிப் போட்டிகளில் பங்கேற்றார். மேலும் 2016ஆம் ஆண்டில் அவர் வீடற்றோருக்கான உலகக்கோப்பைப் போட்டியில் விளையாட கிளாஸ்கோவுக்கு சென்றார். ஒரு போட்டிக்கு தனக்கு 100 டாலர்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கிறார் பௌலமி.

ஆனாலும் தடைகள் இருந்தன

“என்னுடைய குடும்பத்தின் பொருளாதார சூழலால், கால்பந்து விளையாடுவதற்குத் தேவையான பொருட்களைக்கூட என்னால் வாங்க முடியவில்லை,” எனக் கூறும் அவர், “ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவுகூட கிடைக்காது,” என்றும் கூறுகிறார்.

2018ஆம் ஆண்டில் ஒரு பெரிய பின்னடைவு ஏற்பட்டது. பௌலமிக்கு காலில் காயம் ஏற்படவே, அதற்குப் பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. மேலும், அவர் ஓய்வெடுக்க வேண்டிய தேவையும் எழுந்தது. மீண்டும் எலைட் பிரிவில் கால்பந்து விளையாடும் அளவுக்குத் தனது உடலில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், விளையாட்டுக்கு மீண்டும் திரும்புவது வேறொரு பிரச்னையால் தடைப்பட்டது என்கிறார்.

அவருடைய குடும்பத்திற்கு வருமானம் தேவைப்பட்டது. அவருடைய அக்கா திருமணமாகிச் சென்றுவிட, பௌலமி குடும்பச் செலவுகளுக்காக வேலை செய்யவேண்டிய தேவை ஏற்பட்டது.

பௌலமி அதிகாரி

அதனால், தன்னுடைய கால்பந்து கனவை ஒதுக்கிவிட்டு குடும்பத்திற்காகக் கடினமான வேலைகளை மேற்கொள்ளத் தொடங்கினார். 2020ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்தபோது, பெரும்பாலான மக்கள் உணவு டெலிவரி சேவைகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். இந்த வாய்ப்பை எடுத்துக்கொண்ட அவர், உணவு டெலிவரி செய்யும் ஏஜெண்ட்டாக பணி செய்யத் தொடங்கினார்.

சமீப நாட்களில் அவர் அதிகாலை ஒரு மணிக்கெல்லாம் வேலையை முடித்துக் கொள்கிறார். இந்த வேலை மிகவும் சோர்வை ஏற்படுத்தக்கூடியது. அதனால், அவருக்குத் தேவைப்படும் அளவுக்கு அவரால் கால்பந்து பயிற்சியில் ஈடுபட முடியவில்லை. ஒருநாளைக்கு 300 ரூபாய் என்ற அளவில் இதன்மூலம் சம்பாதிக்கிறார். தொடர்ந்து இரு ஷிப்ட்டுகளில் வேலை செய்யும் அவர் ஒரு நாளைக்கு 15 மணிநேரம் வரை வேலை செய்கிறார்.

“எட்டு முதல் 10 மணிநேரம் வரை வேலை செய்து, ஓரளவுக்கு எனக்கு வருமானம் கிடைத்தால், அப்போது என்னால் மூன்று முதல் நான்கு மணிநேரங்கள் வரை கால்பந்து பயிற்சிக்காகச் செலவிட முடியும்,” என்கிறார் அவர்.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து அவருக்கு கால்பந்து பயிற்சியாளர் வேலை கிடைத்தது. ஆனால், அதற்காக அவர் 40 கி.மீ. பயணிக்க வேண்டும், மேலும் ஜொமேட்டோ பணி மூலம் ஈட்டுவதைவிட குறைவான வருமானமே கிடைக்கும். பெண்களுக்காக விளையாட்டுத்துறையில் முதலீடு செய்வதற்கு இந்த நாட்டில், உலகத்தில் ஆர்வம் இல்லை என்கிறார் அவர்.

“இந்தியாவை பற்றிப் பேச வேண்டுமானால், ஆண்கள் மற்றும் பெண்கள் கால்பந்து போட்டிகளை ஒப்பிட்டால், பெரும்பாலான மக்கள் பெண்கள் கால்பந்து போட்டிகளைப் பார்ப்பதோ, கவனிப்பதோ இல்லை,” என்கிறார் பௌலமி.

“அதேபோலத்தான் கிரிக்கெட்டுக்கும். ஆண்கள் கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதற்கு வேலைக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு செல்பவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், பெண்கள் கிரிக்கெட் போட்டி குறித்து அக்கறை கொள்ள மாட்டார்கள். மொத்தத்தில் விளையாட்டுத்துறையில் பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்,” என்கிறார் அவர்.

சரியான ஆதரவுடன், தன்னால் மீண்டும் கால்பந்து விளையாட முடியும் என பௌலமி நம்புகிறார்.

பௌலமி அதிகாரி

அவரின் வீட்டில் உள்ள தொலைக்காட்சியில் சர்வதேச சேனல்கள் வராது என்பதால், அவரால் பெண்கள் கால்பந்து போட்டிகளைப் பார்க்க முடிவதில்லை, எனினும் தான் அலெக்ஸ் மோர்கனின் ரசிகை என்கிறார். ரொனால்டின்ஹோவும் தனக்குப் பிடிக்கும் எனக் கூறுகிறார்.

“இந்தியாவில் இளம்பெண்கள் விளையாட்டை தொழிலாகக் கொள்வதற்கான வாய்ப்பு இல்லை. அதுவும் பௌலமியை போல வறிய நிலையில் உள்ளவர்களுக்கு அது இன்னும் கடினமானதாகவே உள்ளது,” எனக் கூறுகிறார், இந்திய பெண்கள் தேசிய கால்பந்து அணியின் முன்னாள் ஸ்டிரைக்கர் ஷாந்தி முல்லிக். ஷாந்தி முல்லிக், இந்தியாவின் உயரிய விருதான அர்ஜூனா விருதை பெற்ற முதல் பெண் கால்பந்து வீராங்கனை.

“பௌலமியின் சூழல் வேறு மாதிரியாக இருந்திருந்தால் அவர் கால்பந்து விளையாட்டில் நிபுணத்துவம் பெற்றிருப்பார். அவரது கதை பெண்கள் கால்பந்தில் வளர்ச்சியடைவதற்கும் முதலீடு செய்வதற்கும் ஊக்கமளிக்கும் என்று நான் நம்புகிறேன். எனவே, எந்தத் திறமையையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படாது,” என்கிறார்.

ஜனவரி 7 அன்று, அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு, இந்திய கால்பந்தை வளர்க்கும் நோக்கத்துடன் விஷன் 2047 என்ற செயல்திட்டத்தை வெளியிட்டது. பெண்கள் கால்பந்தில் அதிக முதலீடு செய்ய அழைப்பு விடுப்பதே 2026ஆம் ஆண்டில் அதன் இலக்கு. இதில் வீராங்கனைகளுக்குக் குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும் என்பதும் அடங்கும்.

இந்தத் தொலைநோக்குத் திட்டம் நனவாகும் என்று தான் நம்புவதாக பௌலமி கூறுகிறார்.

“நம்மைச் சுற்றி இன்னும் பல பௌலமிக்கள் இருக்கின்றனர், அவர்களும் என்னைப் போல் கஷ்டத்தில் உள்ளனர்.”

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.