Breaking News
பிரிட்டிஷ் ஆட்சியில் பிரிந்த இந்திய குடும்பங்களை இணைக்கும் ஷம்ஷு தீன் – யார் இவர்?

“காணாமல் போன குடும்பத்தைத் தேடும் போது உணர்ச்சிமயமாகவும் மகிழ்ச்சியாகவும் நான் உணர்கிறேன். இது ஏதோ சாதித்த உணர்வையும் தருகிறது” என பிபிசியிடம் கூறினார் ஷம்ஷு தீன்.

டிரினாட் மற்றும் டொபாகோவைச் சேர்ந்த புவியியலாளர் ஷம்ஷு தீன், இந்தியாவிலுள்ள நீண்ட காலத்திற்கு முன் தொலைத்த உறவினர்களைக் கண்டறிய கரீபியனில் உள்ள 300 குடும்பங்களுக்கு உதவியுள்ளார்.

இதில் இரண்டு முன்னாள் பிரதமர்களும், அவரது சொந்த குடும்ப உறுப்பினர்களும் அடங்கும்.

உங்களுக்குத் தெரியாத ஒரு குடும்ப உறுப்பினரைக் கண்டறிவது மீண்டும் மீண்டும் காதலில் விழுவது போன்றது என்கிறார் ஷம்ஷு தீன்.

‘புதிய அடிமை வர்த்தகம்’ மூலம் இடப்பெயர்வு

பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்தியாவில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. ஆனால், தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக இந்திய ஒப்பந்த தொழிலாளர்கள் மலிவான தொழிலாளர்களாக பிரிட்டிஷ் ஆட்சி நடைபெறும் அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்பட்டனர்.

1838 மற்றும் 1917க்கு இடைப்பட்ட காலத்தில் பல இந்தியர்கள் கரீபியன், தென்னாப்பிரிக்கா, மொரிஷியஸ் மற்றும் ஃபிஜி ஆகிய நாடுகளுக்குச் சர்க்கரைத் தோட்டங்களில் பணிபுரிவதற்காகச் சென்றனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பெரிய அளவில் இந்த நாடுகளில் இன்றும் வாழ்கின்றனர்.

சிலர் விருப்பத்துடன் வேலைக்குச் சென்றாலும் மற்றவர்கள் கட்டாயப்படுத்தியே அழைத்துச் செல்லப்பட்டனர். எந்த நாட்டிற்கு வேலைக்குச் செல்கிறோம் என்பதே தெரியாமல் பலரும் அழைத்துச் செல்லப்பட்டனர். ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ‘புதிய அடிமை வர்த்தகம்’ என்று சில வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டனர்.

கரீபியனுக்கு ஒப்பந்த தொழிலாளிகளாக வந்தவர்களின் கொள்ளுப் பேரக்குழந்தைகள், தற்போது இந்தியா வந்து தங்களுக்கே தெரியாத உறவினர்களை ஷம்ஷு தீன் உதவி மூலம் தேடுகின்றனர்.

குடும்பங்களைத் தேடுதல்

ஷம்ஷு தீனுக்கு மற்றவர்களின் குடும்பங்களைத் தேடும் ஆர்வம், பள்ளி மாணவனாக இருந்த போது ஓர் ஆவணத்தில் தன்னுடைய குடும்பப் பெயர்களைப் பார்த்து, அவர்கள் குறித்து தேட ஆரம்பித்த போது தொடங்கியது.

‘’எங்கள் வீடு கட்டப்பட்டிருந்த இடம் முன்ரடின் என்பவரின் பெயரில் இருந்தது. அது என் தாத்தாவின் தாத்தா. அவர் குறித்து என் குடும்பத்தில் யாரும் எதுவும் சொல்லவில்லை’’ என்கிறார் ஷம்ஷு தீன்.

இந்திய தொழிலாளர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டிரினிடாட்டில் இந்திய தொழிலாளர்கள்

பட்டப்படிப்பு முடித்த பிறகு ஷம்ஷு தீனுக்கு கனடாவில் வேலை கிடைத்தது. 1972ஆம் ஆண்டு டிரினாட்டிற்கு முதன்முறையாக சென்ற போது, அவர் ரெட் ஹவுஸுக்குச் சென்றார். அவருடன் மனைவி, சகோதரர் உடன் சென்றனர். ஒரு பாதாள அறையில் குவிந்திருந்த ஆவணங்களில் அவர்கள் முன்ரடின் என்ற பெயரைத் தேடினர். நான்கு மணி நேரத்திற்குப் பிறகு அவர்கள் தேடியது கிடைத்தது.

“அதைக் கண்ட போது ஆனந்தக் கண்ணீர் வந்தது. பூச்சிகள் தின்ற புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் முன்ரடின் என்ற பெயரைக் கண்டேன்” என்கிறார் ஷம்ஷு தீன்.

1858ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி கல்கத்தாவிலிருந்து புறப்பட்டு ஏப்ரல் 10ஆம் தேதி முன்ரடின் இங்கு வந்ததாக ஷம்ஷு தீன் கூறுகிறார்.

“முன்ரடின் படித்தவர் மற்றும் ஆங்கிலம் பேசுவார் என்பது எங்களுக்குத் தெரியும். முன்ரடின் சர்க்கரை தோட்டங்களில் வேலை செய்தார். பின்னர் அவர் மொழிமாற்றும் பணி செய்தார். ஒப்பந்தம் முடிந்த பிறகு, ஆசிரியராகப் பணியாற்றி, இறுதியாக இரண்டு கடைகளைத் திறந்தார். அவருக்கு இரண்டு மனைவிகள் மற்றும் ஐந்து குழந்தைகள் இருந்தனர். அவர் வசித்த வீடு அவரது குழந்தைகளுக்கு பரம்பரையாகச் சொந்தமாகின. ஆனால், பின்னர் தீயில் எரிந்து நாசமானது’’ என்கிறார் ஷம்ஷு தீன்.

நீண்ட காலத்திற்கு முன் தொலைத்த உறவினருடன் சந்திப்பு

முன்ரடின் போன்ற பல ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைக்கு வந்த நாடுகளிலேயே இறந்தனர். முன்ரடின் குறித்து தேடிய போது, ஷம்ஷு தீன் தனது குடும்பத்தின் மூன்று தலைமுறையைக் கண்டுபிடிக்க முடிந்தது.

“என் அப்பாவின் தந்தை வழி பாட்டியின் அப்பா முகமது மூக்டி 1852ஆம் ஆண்டு கல்கத்தா துறைமுகத்திலிருந்து கப்பலில் கிளம்பினார்” என்கிறார் ஷம்ஷு தீன்.

அவர் அடையாளம் கண்டதில் மூக்டியே அந்தக் குடும்பத்தில் மூத்த நபர். அப்போது முன்ரடின் வயது 23 மட்டுமே. 1859ஆம் ஆண்டுக்குப் பிறகே ஒப்பந்த தொழிலாளர்களின் கிராமப் பெயர்கள் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதால் முன்ரடின் எந்தஊரைச் சேர்ந்தவர் என்பது யாருக்கும் தெரியாது.

தனது தாயின் வம்சாவளி பற்றி அவர் ஆராயத் தொடங்கியபோது, 1865, 1868, 1870 மற்றும் 1875ஆம் ஆண்டுகளில் அவர்கள் இங்கு வந்திருப்பது தெரியவந்தது. எனவே அவர்களின் பூர்வீக கிராமங்களை எளிதாக அடையாளம் காண முடியும்.

“எனது தாய்வழி தாத்தாவின் தாய்வழி பாட்டி, ஜோஸ்மியா 1870ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் நவம்பர் 26 வரை வில்ட்ஷயர் பயணத்தில் வந்தார். அவருடைய சகோதரர் ஜுமன் ஜோலாஹாவின் வழித்தோன்றல்களை நான் உத்தர பிரதேசத்தில் கண்டேன்” என்கிறார் ஷம்ஷு தீன்.

ஷம்ஷு தீனால் இந்திய ஆவணங்களில் ஜோசிமியாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும், இறப்புப் பதிவேடு மற்றும் கிடைத்த தரவுகளைப் பயன்படுத்தி தனது குடும்பத்தின் காணாமல் போன தலைமுறையின் ஒரு பகுதியை அவரால் கண்டுபிடிக்க முடிந்தது.

ஷம்ஷு தீன்

பட மூலாதாரம்,SHAMSHU DEEN

பின்னர், அவர்களைக் கண்டுபிடித்து, போங்கியின் மூதாதையர்களைச் சந்திக்கும் வாய்ப்பு பெற்றார். போங்கி 1872ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து ஒப்பந்தத் தொழிலாளியாக கரீபியனுக்கு வந்த அவரது குடும்பத்தின் கடைசி உறுப்பினர். அவர் தனது ஏழு வயதில் பெற்றோருடன் டிரினிடாட் வந்தடைந்தார்.

கரீபியன் மற்றும் இந்தியாவில் உள்ள போங்கியின் உறவினர்களைச் சந்திக்கச் செல்வது ஷம்ஷு தீனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

“1949ஆம் ஆண்டில் இறந்த போங்கியின் ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே என்னிடம் உள்ளது. அவர் எள்ளு, கொள்ளுப்பேரக்குழந்தைகளைப் பார்த்துவிட்டார். அவருக்கு 115 வயது என்று கூறப்படுகிறது. ஆனால் இறக்கும் போது அவருக்கு 84 வயது மட்டுமே என்பதை நான் கண்டறிந்துள்ளேன்” என்கிறார் ஷம்ஷு தீன்.

பொழுதுபோக்கு தொழில்முறையாக மாறியது

ஷம்ஷு தீன் புவியியல் ஆசிரியராக நினைத்தார். ஆனால் அவரது பொழுதுபோக்கு கவனம் பெறத் தொடங்கியதும், 10 இந்து மற்றும் 10 முஸ்லீம் குடும்பங்களைக் கண்டறிய இந்திய தூதரகத்திடம் இருந்து உதவித்தொகை கிடைத்தது.

ஒப்பந்தத் தொழிலாளர் முறையால் பாதிக்கப்பட்ட 300 குடும்பங்களுக்கு அவர் உதவினார், பின்னர், அதை தனது தொழிலாக மாற்றினார்.

டிரினிடாட் மற்றும் டொபாகோவின் இரண்டு பிரதமர்களான பாஸ்டியோ பாண்டே மற்றும் கம்லா பெர்சாத் பிஸ்ஸேசர் ஆகியோர் தங்கள் குடும்ப உறுப்பினர்களை சந்திக்க உதவியது ஷம்ஷு தீனுக்கு புதிய கதவுகளைத் திறந்தது.

தொடக்கத்தில் இருந்ததைவிட மக்களைத் தேடுவது இன்று எளிமையாக இருந்தாலும், இன்றும் சவால்கள் இருப்பதாகவும், 80 சதவிகித தேடல்களில் தான் வெற்றிபெற்றுள்ளதாகவும் ஷம்ஷு தீன் கூறுகிறார்.

“எல்லோருடைய பூர்வீகத்தையும் என்னால் கண்டுபிடிக்க முடியாது. சில நேரங்களில் தவறான தகவல்கள் ஆவணங்களில் கொடுக்கப்பட்டிருக்கலாம்” என்றும் அவர் கூறுகிறார்.

வாழ்க்கையை மீண்டும் உருவாக்குதல்

துரதிர்ஷ்டவசமாக, சில ஒப்பந்த தொழிலாளர்கள் இந்தியாவில் இருந்து டிரினிடாட் செல்லும் வழியிலேயே இறந்தனர். வெற்றிகரமாக அங்கு சென்றடைந்தவர்கள் பெரும்பாலும் கடுமையான மற்றும் சவாலான பணிச்சூழலை எதிர்கொண்டனர்.

சில ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் ஒப்பந்தம் நிறைவடைந்த பிறகு டிரினாட்டிலேயே விரும்பி இருந்ததாகவும் ஷம்ஷு தீன் கூறுகிறார்.

முன்னாள் ஒப்பந்தத் தொழிலாளி பால்டு பெர்சாத் உட்பட அவர்களது பூர்வீகத்தைக் கண்டறிய டிரினிடாட்டைச் சேர்ந்த பாலி மற்றும் லீலா மஹராஜ் ஆகியோருக்கு உதவியதை அவர் நினைவு கூர்ந்தார்.

ஒப்பந்தத்தம் முடிவடைந்த பிறகு பால்டு பெர்சாத் இந்திய திரும்பி தனது சொந்த கிராமத்தில் பள்ளி கட்டுவதற்காக நிலம் வாங்கினார். இந்தத் தம்பதி பள்ளியைப் பார்ப்பதற்காக ஷம்ஷு தீன் சிறப்பு ஏற்பாடு செய்தார்.

“எனது பள்ளி நாட்களில் இருந்தே என் கொள்ளு தாத்தா எங்கிருந்து வந்தார் என்பதைக் கண்டறியும் ஆவல் எனக்கு இருந்தது’’ என்கிறார் டேவிட் லகான்.

லகானின் சகோதரர், தந்தை, சாதி மற்றும் அவரது கிராமத்தின் பெயர்கள் அடங்கிய குடியேற்ற ஆவணங்களை தேசிய ஆவணக் காப்பகத்தில் இருந்து ஷம்ஷு தீன் கண்டறிந்தார். இந்தியாவில் உள்ள உள்ளூர் தொடர்புகளை பயன்படுத்தி, டேவிட் லக்கானின் நீண்டகால உறவினர்களைக் கண்டுபிடித்து, 2020ஆம் ஆண்டில் அவர்கள் குடும்பம் ஒன்று சேர உதவினார்.

உணர்ச்சிமயமான மறுசந்திப்புகள்

“இது கனவு நனவானது போல இருந்தது. நான் அழுதுவிட்டேன். எங்கள் குடும்பத்தைப் பற்றி அறிந்து கொண்ட உணர்வு சிறப்பாக இருந்தது. இது ஒரு சிறந்த அனுபவம்” என டேவிட் லகான் கூறுகிறார்.

தங்கள் கிராமத்திற்குச் செல்வதற்கு முன் லகானின் குடும்ப உறுப்பினர்கள் வாரணாசியில் அவரைச் சந்தித்தனர்.

“ஒட்டுமொத்த கிராமமும் எங்களை வரவேற்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் எங்களுக்கு மாலை அணிவித்தனர்” என டேவிட்டின் மனைவி கீதா லகான் நினைவுகூர்கிறார்.

பிரிட்டிஷ் ஆட்சியில் பிரிந்த இந்திய குடும்பங்களை இணைக்கும் ஷம்ஷு தீன்

பட மூலாதாரம்,SHAMSHU DEEN

படக்குறிப்பு,பாலியும் லீலா மகராஜும் தங்கள் முன்னோர்கள் கட்டிய பள்ளிக்கு வந்தனர்

காசிபூரில் தங்கியிருந்த லகானின் சகோதரர் போத்தியின் கொள்ளுப் பேரக்குழந்தைகளையும் அவர்கள் சந்தித்தனர். லகான் வாழ்ந்த வீடு அவரது குழந்தைகளால் இடித்து மீண்டும் கட்டப்பட்டது.

இவர்கள் நேரில் சந்திப்பதற்கு முன்பு காணொளி அழைப்பு மூலம் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். மொழிபெயர்ப்பு கருவிகள் மூலம் மொழித்தடைகளை சமாளித்தனர்.

இந்திய உறவினர்களுடன் பல ஒற்றுமைகளைக் கண்டறிந்ததாக கீதா லகான் கூறுகிறார். ஒப்பந்தத் தொழிலாளர்களிடமிருந்து வருங்கால சந்ததியினருக்குக் கடத்தப்பட்ட கலாசார அறிவுதான் இதற்கு காரணமென தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

“என் அம்மா சமைக்கும் குழம்பில் இருந்து வரும் வாசனை போல இந்தியாவில் நாங்கள் சாப்பிட்டதில் இருந்தது. ஒரே இசையை நாங்கள் ரசிக்கிறோம். என் பெற்றோர்கள் இந்தியில் பேசுவார்கள். நான் இந்தியில் பேசவில்லை, ஆனால் நான் இந்தியில் பிரார்த்தனை செய்கிறேன்” என்கிரர் கீதா லகான்.

தற்போது ஏழு வயது பேரனிடம் தங்களது இந்தியப் பயணத்தைப் பற்றிச் சொல்லி அவனுக்கு பாரம்பரிய ஆர்வத்தை ஊட்டுவதாகக் கூறுகிறார்கள் கீதாவும் டேவிட் லகானும்.

ஓய்வு பெற்ற பிறகும் 14 குடும்பங்களைத் தேடி 1996ஆம் ஆண்டு ஆறு மாதங்கள் ஷம்ஷு தீன் இந்தியாவுக்கு வந்தார்.

தற்போது 76 வயதாகும் ஷம்ஷு தீன், தான் செய்யும் வேலை இன்னும் தனக்கு மகிழ்ச்சியைத் தருவதாகக் கூறுகிறார்.

’’ஒவ்வொரு வழக்கும் ஒரு புதிர். எந்த இரு வழக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. எனக்கு உடல் மற்றும் மூளை வலு இருக்கும்வரை இந்த வேலையை நான் செய்வேன். இதுதான் என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது’’ என்கிறார் ஷம்ஷு தீன்.

தனது குடும்ப வரலாற்றுக்குள் அவர் எவ்வளவு பயணித்துள்ளார்?

‘’டிரினாட் மற்றும் டொபாகோ எனது வீடு. என் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் கனடாவில் வசிக்கின்றனர். டிரினிடாட் மற்றும் இந்தியாவுடன் அவர்கள் கலாசார தொடர்புகளைப் பேணி வருகின்றனர்’’ என்கிறார் ஷம்ஷு தீன்.

“எல்லா மனிதர்களைப் போல, நாம் அனைவரும் புலம்பெயர்ந்தவர்கள் என்று நினைக்கிறேன். ஆப்ரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு, இந்தியாவிலிருந்து டிரினிடாட்டிற்கு, டிரினிடாட்டிலிருந்து கனடாவிற்கு, அடுத்து எங்கே? ஆனால் இந்திய பாரம்பரியம் நமக்குள் ஆழமாக உள்ளது” என்றும் ஷம்ஷு தீன் கூறுகிறார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.