ரூ.750 கோடி ஓவியங்கள் மாயம்:ஏர் இந்தியாவில் ஊழல்?
‘ஏர் இந்தியா’ வசம் இருந்த, 750 கோடி ரூபாய் மதிப்புள்ள அரிய ஓவியங்கள் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பொதுத்துறை நிறுவனமான, ‘ஏர் இந்தியா’ கடுமையான நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அதன் கடன் சுமை, 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சென்றதையடுத்து, அரசு, கடனுதவி அளித்துள்ளது; எனினும் கடன் சுமையில் இருந்து அந்நிறுவனம் மீளவில்லை.
இதையடுத்து, ஏர் இந்தியாவின் பங்குகளை விற்க, மத்திய அமைச்சரவை, சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில், ஏர் இந்தியாவிற்கு சொந்தமான, 750 கோடி ரூபாய் மதிப்புள்ள பழமையான ஓவியங்கள் மாயமாகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து ஏர் – இந்தியா ஊழியர்கள் சிலர் கூறியதாவது: மும்பை உட்பட, பல்வேறு நகரங்களில் உள்ள ஏர் இந்தியா அலுவலகங்களில் பழமையான பல ஓவியங்கள் உள்ளன. பிரபல ஓவியர் ஜதின் தாஸ், தன்னுடைய ஓவியங்கள் சிலவற்றின் மாதிரிகளை, தனிப்பட்ட முறையில் படம் எடுப்பதற்காக, ஏர் இந்தியா நிர்வாகத்தை அணுகினார்.
ரூ. 750 கோடி மதிப்பு
‘அவர் வரைந்த பல பிரசித்தி பெற்ற ஓவியங்கள், ஏர் இந்தியா நிர்வாகம் வசம் இல்லை’ என்ற விபரம் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, நடந்த சோதனையில், 3,500 ஓவியங்கள் காணாமல் போயுள்ளது உறுதியாகியுள்ளது; இதன் மதிப்பு, 750 கோடி ரூபாய். இவ்வாறு அவர்கள் கூறினர்.