ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரங்கள்
பிரதமர் நரேந்திர மோடியின், ‘துாய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ், மும்பை மெட்ரோ ரயில் நிலையங்களில், பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதற்கான, ‘கிரஷர்’ இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
மெட்ரோ நிலையங்கள் :
மஹாராஷ்டிர மாநிலத்தில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., – சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. தலைநகர் மும்பையில், மெட்ரோ ரயில் நிலையங்களில், பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும், ‘கிரஷர்’ என்னும் மறுசுழற்சி இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.இது குறித்து, மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மும்பையில், அதிக அளவில் பயணியர் வந்து செல்லும், ஆறு மெட்ரோ ரயில் நிலையங்களில், கிரஷர் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களுக்கு வரும் பயணியர், தங்களிடம் உள்ள, பயன்படுத்தப்பட்ட, பிளாஸ்டிக் பாட்டில்களை, குப்பையில் போடாமல், இந்த இயந்திரத்தில் போட அறிவுறுத்தப்ட்டுள்ளனர்.பிளாஸ்டிக் பாட்டில்களை இயந்திரத்துக்குள் போட்டதும், ஒரு கூப்பன் கிடைக்கும். பொருட்கள் வாங்கும்போது அந்த கூப்பனை கொடுத்து, தள்ளுபடி பெறலாம்.
விற்பனை :
இந்த இயந்திரத்தில் போடப்பட்டு, நொறுக்கப்படும் பிளாஸ்டிக்குகள், மறுசுழற்சி பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் விற்பனை செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.