Breaking News
‘டோகோலாம் எல்லை பிரச்னை : சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சி’

‘சிக்கிம் மாநில எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்னை யானது, சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியின் துவக்கமே’ என, அமெரிக்காவைச் சேர்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இந்தியா – சீனா – பூட்டான் எல்லையில் உள்ள டோகோலாம் பகுதியில் சாலைப் பணிகளில் ஈடுபட, சீனா முயன்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நம் படைகள் அந்த முயற்சியை முறியடித்தன.
இந்த பிரச்னை குறித்து, அமெரிக்காவைச் சேர்ந்த, வெளியுறவுத் துறை நிபுணர்கள் சிலர் கூறியுள்ள கருத்துகள்: தெற்கு சீனக் கடல் பகுதியில், முதலில் சிறிய அளவில் ஆக்கிரமிப்பை துவங்கிய சீனா, பின், அதை முற்றிலுமாக ஆக்கிரமிக்கத் துவங்கியது. பல்வேறு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, அங்கு சீனா தொடர்ந்து ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. டோகோலாம் பகுதியிலும், சாலைப் பணிகள் என்ற பெயரில், தன் அடுத்த ஆக்கிரமிப்பு முயற்சியை சீனா துவக்கியுள்ளது. அங்கு மோதல் ஏற்படுவதற்கான சூழ்நிலையை, சீனா உருவாக்கி வருகிறது. அதே நேரத்தில், தற்போதைய பிரச்னையில், இவ்விரு நாடுகளைத் தவிர, பாகிஸ்தான், திபெத் உள்ளிட்ட பகுதிகளில் மற்ற பிரச்னைகளும் சேர்ந்துள்ளதால், இதற்கு உடனடியாக தீர்வு கிடைப்பதற்கான சூழல் நிலவவில்லை. இவ்வாறு நிபுணர்கள் கூறியுள்ளனர்.

‘சுமுக தீர்வு ஏற்படும்’ :

‘இந்திய – சீன எல்லைப் பிரச்னைக்கு சுமுக தீர்வு ஏற்படும்’ என, வெளியுறவு துறைச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் ஒரு கருத்தரங்கில், அவர் பேசியதாவது: இந்தியா – சீனா இடையே மிகப் பெரிய எல்லை அமைந்துள்ளது. எல்லைப் பகுதி முறையாக பிரிக்கப்படாததால், இதற்கு முன்னும், இது போன்று ஏற்பட்ட பிரச்னைகளுக்கு சுமுகமாக பேசி தீர்வு கண்டுள்ளோம். அதுபோலவே, டோகோலாம் பிரச்னைக்கும் தீர்வு ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

2,500 வீரர்கள் :

சிக்கிம் எல்லையில் நம் ராணுவம், 2,500 வீரர்களை குவித்துள்ளது. சீனா வாலாட்டினால், இவர்கள் பதிலடி கொடுக்க தயார் நிலையில் இருப்பதாக, ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.