குறைந்த விலைக்கு தக்காளி; அமைச்சர் செல்லூர் ராஜு உறுதி
”தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை, குறைந்த விலையில் விற்க, அரசு நடவடிக்கை எடுக்கும்,” என, கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜு தெரிவித்தார்.
சட்டசபையில், நேற்று நடந்த விவாதத்தின் போது, தக்காளியும், சின்ன வெங்காயமும் கிலோ, 100 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது எனவும், அவற்றை அரசே கொள்முதல் செய்து, குறைந்த விலைக்கு விற்பனை செய்யுமா என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்ததாவது: வறட்சி காரணமாக, காய்கறிகள் வரத்து குறைவாக உள்ளது. சிறிய வெங்காயம் விலை சற்று கூடியுள்ளது. கூட்டுறவு அங்காடிகளில், வெங்காயம் கிலோ, 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில், 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஜெ., முதல்வராக இருந்த போது, பெரிய வெங்காயம் விலை ஏறியது. அப்போது, வெளி மாநிலங்களில் இருந்து, 22 டன் வெங்காயம் வரவழைக்கப்பட்டு, குறைந்த விலைக்கு விற்கப்பட்டது. அதேபோல் தற்போதும், தக்காளி, வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.