Breaking News
இணையதள குற்றங்களை தடுப்பதில் விஞ்ஞானிகள் கவனம் செலுத்தவேண்டும் அறிவியல் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

இணைய தள குற்றங்களை தடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும் என்று விஞ்ஞானிகளுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்திய அறிவியல் மாநாடு

ஆந்திர மாநிலம் திருப்பதி நகரில் உள்ள வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் 104-வது இந்திய அறிவியல் மாநாடு நேற்று தொடங்கியது.

5 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கா, ஜப்பான், இஸ்ரேல், பிரான்ஸ் நாடுகளின் விஞ்ஞானிகள் உள்பட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறிவியல் அறிஞர்களும் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

கவனம் செலுத்துங்கள்

இன்று உலக அளவில் இணைய தள குற்றங்கள்(சைபர் கிரைம்) மூலம் தாக்குதல் நடத்துவது அதிகமாகி வருகிறது. அதன் தொழில்நுட்பத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதும் அதிகரித்து இருக்கிறது. இதற்கு விஞ்ஞானிகள் தீர்வு காணவேண்டியது மிகவும் அவசியம்.

ஏனென்றால் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மக்களை பிரிப்பதற்கான முயற்சி இதன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது ஏற்படுத்தும் சவால்களும், அழுத்தங்களும் அதிகம். இதனால்தான் இப்பிரச்சினைக்கு விஞ்ஞானிகள் தீர்வு காண்பதில் கவனம் செலுத்தவேண்டும் என்று வற்புறுத்துகிறேன்.

மேம்படுத்தவேண்டும்

அதேநேரம் இணைய தளத்தை நாம் குறிப்பாக ஆராய்ச்சி, பயிற்சி, ரோபோட் தொழில் நுட்ப திறன் மேம்பாடு, செயற்கை முறை அறிவுத்திறன், மின்னணு பொருட்கள் தயாரிப்பு, பெரும் புள்ளி விவரங்கள் பகுப்பாய்வு, ஆழ்ந்து கற்றல், ஒட்டு மொத்த தகவல் தொடர்பு போன்ற நல்ல நிகழ்வுகளுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த தொழில் நுட்பங்களை உற்பத்தி துறைகள், சுற்றுச் சூழல், குடிநீர், எரிசக்தி, போக்குவரத்து நெரிசல் மேலாண்மை, சுகாதாரம், நிதி அமைப்புகள், புவியியல் தகவல்கள், பாதுகாப்பு, கட்டமைப்பு, குற்றங்களை எதிர்த்து போராடுதல் ஆகியவற்றில் பயன்படுத்துவதையும் மேம்படுத்தவேண்டும். ஏனெனில் நம் முன்னால் இந்த மாற்றங்கள் கணிக்க முடியாத அளவிற்கு மிக வேகமாக நிகழ்ந்து வருகின்றன.

ஊக்கம் அளிக்கிறோம் எனது அரசு பல்வேறு அறிவியல் ஆய்வு திட்டங்களுக்கு ஆதரவளிப்பதில் உறுதி கொண்டு இருக்கிறது. குறிப்பாக கண்டுபிடிப்புகளுக்காக அடிப்படை அறிவியலை செயல்முறை சார்ந்த அறிவியலாக மாற்றுவதற்கு ஊக்கம் அளித்து வருகிறது.

இதில் நமக்கு சுத்தமான குடிநீர், எரிசக்தி, உணவு, சுற்றுச்சூழல், தட்பவெப்பம், பாதுகாப்பு சுகாதாரம் ஆகியவை மிகவும் சவால்களாக உள்ள முக்கிய துறைகள் ஆகும்.

எனவே இதற்கு வலுவான அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கட்டமைப்பு தேவை. இதனால்தான் கல்வியியல், தொழிற்சாலைகள் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு ஆய்வகங்கள் ஆகியவற்றில் அறிவியல் தொழில் நுட்பத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

வேகமான முன்னேற்றம்

அறிவியல் ஆய்வுகளை வெளியிடுவதில் இன்று இந்தியா 6-வது இடத்தில் இருப்பதாக உலக மதிப்பீடுகள் கூறுகின்றன. இது இந்தியாவில் ஆண்டுக்கு 14 சதவீதம் அதிகரித்தும் வருகிறது. ஆனால், உலக சராசரி வெறும் 4 சதவீதம்தான். எனவே, வருகிற 2030-ம் ஆண்டில் அறிவியல் ஆய்வுகளை வெளியிடுவதில் உலகின் தலைசிறந்த முதல் 3 நாடுகள் வரிசைக்குள் இந்தியா வந்துவிடும்.

நமது கல்வி நிறுவனங்கள் ஆராய்ச்சி திட்டங்களுக்காக வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள சிறந்த இந்திய அறிவியல் ஆய்வு மாணவர்களை வரவழைத்து நீண்டகால ஆராய்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

நமது சமூகத்தின் நலிந்த மற்றும் ஏழைகளின் வளர்ச்சி, மேம்பாட்டுக்கு அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் ஒரு கருவியாக பயன்படுத்தி அமைச்சரகங்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி. ஆகியவை ஒருங்கிணைந்து செயலாற்றவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்துகொண்டோர்

தொடக்க நாள் நிகழ்ச்சியில், ஆந்திரா-தெலுங்கானா கவர்னர் நரசிம்மன், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை மந்திரி ஹர்ஷ வர்த்தன், ராஜாங்க மந்திரி ஒய்.எஸ்.சவுத்ரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.