Breaking News
ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி இஸ்ரேல் பிரதமரிடம் போலீஸ் கிடுக்கிப்பிடி விசாரணை

ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் நாட்டின் பிரதமராக பதவி வகிப்பவர் பெஞ்சமின் நேட்டன் யாஹூ (வயது 67).

அவர் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தொழில் அதிபர்களிடம் இருந்து, பல்லாயிரம் டாலர் மதிப்பிலான பரிசுகளை முறையற்ற விதத்தில் பெற்றுக்கொண்டு, ஊழல் புரிந்துள்ளார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதை போலீஸ் செய்தி தொடர்பாளர் மிக்கி ரோசன்பெல்டும், அட்டார்னி ஜெனரல் அவிச்சாய் மாண்டல்பிளிட்டும் உறுதி செய்தனர்.

குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்

இந்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அவர், தனது லிக்குட் கட்சி எம்.பி.க்களிடம் பேசும்போது, “நாம் ஊடக செய்திகளை கேள்விப்படுகிறோம். இதன் காரணமாக டெலிவிஷன் ஸ்டூடியோக்களிலும், எதிர்க்கட்சி அலுவலகங்களிலும் பண்டிகை கொண்டாட்டம் போல காணப்படுவதை பார்க்க முடிகிறது. அவர்களிடம் நான் கேட்டுக்கொள்வதெல்லாம், அவசரப்படாதீர்கள். கொண்டாட்டத்துக்கு காத்திருங்கள் என்பதுதான். நீங்கள் வெப்பக்காற்று பலூன்களை வெடிக்கவிடுங்கள். நாங்கள் இஸ்ரேல் நாட்டை தொடர்ந்து வழிநடத்துவோம்” என கூறினார்.

இருப்பினும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் நேற்று முன்தினம் தன் வீடு தேடி வருவதற்கு முன்பாக நேட்டன் யாஹூ கூறுகையில், “நான் அப்பாவி. எதுவும் நடக்காது. ஏனென்றால் எதுவும் கிடையாது” என கூறினார்.

3 மணி நேரம் விசாரணை

இந்த நிலையில் ஜெருசலேம் நகரில் உள்ள அவருடைய வீட்டுக்கு போலீசார் நேற்று முன்தினம் இரவில் வந்தனர். ஊழல் குற்றச்சாட்டு குறித்து அவரிடம் 3 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

போலீசார் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்துவதை யாரும் படம் பிடித்துவிடக்கூடாது என்பதால், அவரது வீட்டின் முன் கருப்பு திரை போடப்பட்டிருந்தது.

பெஞ்சமின் நேட்டன் யாஹூ மீது ஊழல் குற்றச்சாட்டு எழுவது இது முதல் முறை அல்ல.

பல முறை அவரும், அவரது மனைவி சாராவும் ஊழல் குற்றச்சாட்டுகளை சந்தித்துவந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவிக்கு ஆபத்தா?

இந்த விசாரணை காரணமாகவோ, குற்றச்சாட்டு காரணமாகவோ அவர் பதவி விலகத்தேவையில்லை. ஒரு வேளை அவர் மீதான குற்றச்சாட்டு கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டு, அது இஸ்ரேல் சுப்ரீம் கோர்ட்டில் உறுதி செய்யப்பட்டால் அவருடைய பதவிக்கு ஆபத்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.