பாட்டியின் கண்ணில் 27 ‘கான்டாக்ட் லென்ஸ்’கள்
பிரிட்டனில், 67 வயது பாட்டிக்கு, அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்யும்போது, அவர் கண்ணில், 27, ‘கான்டாக்ட் லென்ஸ்’கள் ஒட்டியிருந்ததை பார்த்து, டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து, பிரிட்டன் மருத்துவ பத்திரிகையில் வெளியான செய்தி விபரம்: பிர்மிங்காம் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், கடந்த ஆண்டு நவம்பரில், 67 வயது பாட்டி, கண் பார்வை குறைபாடு இருப்பதாக கூறி, அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கண் புரை நோய் ஏற்பட்டுள்ளதாக கருதிய டாக்டர்கள், அதற்கான அறுவை சிகிச்சை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்தனர். அப்போது, அவர் கண்ணில், நீல நிறமுடைய, ‘கான்டாக்ட் லென்ஸ்’கள், ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கிடந்ததை பார்த்து, டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவற்றை நீக்கிய டாக்டர்கள், 27, கான்டாக்ட் லென்ஸ்கள், பாட்டியின் கண்ணில் ஒட்டி இருந்ததாக தெரிவித்தனர்.
இது குறித்து, டாக்டர் ரூபால் மொர்ஜாரியா கூறியதாவது: பாட்டியின் கண்ணில், 27 கான்டாக்ட் லென்ஸ்கள் ஒட்டி இருந்தன. இதுபோன்ற சம்பவம், இதற்கு முன் எப்போதும் நிகழ்ந்ததே இல்லை. இத்தனை லென்ஸ்கள், கண்ணில் ஒட்டி இருந்தால், தாங்க முடியாத எரிச்சல் ஏற்பட்டிருக்கும். அதை, அவர் உணராமல் போனது ஆச்சரியமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கான்டாக்ட் லென்ஸ்கள் அகற்றப்பட்ட பாட்டி கூறுகையில், ‘கடந்த, 35 ஆண்டுகளாக, கான்டாக்ட் லென்ஸ்கள் பொருத்தி வந்துள்ளேன். இதுதொடர்பாக, அடிக்கடி டாக்டர்களை சந்தித்தது கிடையாது. பல முறை, கான்டாக்ட் லென்ஸ் தொலைந்து விட்டதாக கருதி, வேறு லென்ஸ் பொருத்தி வந்துள்ளேன். அதனால், இத்தனை லென்ஸ்கள், கண்ணில் ஒட்டி இருப்பதாக கருதுகிறேன்’ என்றார்.