சீனாவிடமிருந்து காத்து கொள்ளும் திறமை உள்ளது: சுஷ்மா
சீனாவிடமிருந்து பாதுகாத்து கொள்ள தேவையான திறமை இந்தியாவிடம் உள்ளது என வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.சிக்கிம் மாநில எல்லையில் இந்தியா – சீனா இடையே நிலவி வரும் பதற்றம் தொடர்பாக ராஜ்யசபாவில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது: டோக்லாம் பகுதியில் தற்போதைய நிலையை மாற்ற சீனா முயற்சி செய்து வருகிறது. இந்தியா தன்னை காத்து கொள்ள தேவையான திறமை உள்ளது. இதனால், அச்சுறுத்தல் உள்ளதாக உணரவில்லை. டோக்லாம் பகுதியில் கடந்த சில வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வர சீனா முயற்சி செய்து வருகிறது. சாலை சீரமைத்தல், சாலை அமைத்தல் போன்ற பணிகளை செய்வதாக கூறி அங்கு வர முயற்சி செய்கிறது. தற்போது, புல்டோசகர்கள், கட்டுமான சாதனங்களுடன், டோக்லாம் பகுதியில் குறிப்பிட்ட எல்லையை தாண்டும் எண்ணத்துடன் சீனா வந்தது. இது நமது பாதுகாப்புக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் ஆகும். இந்திய ராணுவம் திரும்ப பெற வேண்டும் என சீனா சொல்கிறது. அதேபோல், அந்நாட்டு ராணுவமும் அங்கிருந்து வெளியேற வேண்டும். இந்த பிரச்னையில், அனைத்து நட்பு நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன. சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. நமது தரப்பில், இந்த பிரச்னையில் நமக்கு அனைத்து உரிமையும் சட்டமும் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.