பெண்கள் உலக கோப்பை: இந்தியா தோல்வி
பெண்கள் உலக கோப்பை பைனலில் ஏமாற்றிய இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து ஏமாற்றியது. இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இங்கிலாந்து மற்றும் வேல்சில் பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடந்த பைனலில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி ‘பேட்டிங்’ தேர்வு செய்தது. இரு அணியிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
சிறப்பான துவக்கம்
இங்கிலாந்து அணிக்கு லாரன் வின்பீல்டு, பியோமன்ட் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. ஷிகா பாண்டே பந்துவீச்சில் பியோமன்ட் தொடர்ந்து இரண்டு பவுண்டரி அடித்தார். தன் பங்கிற்கு ராஜேஸ்வரி பந்தை வின்பீல்டு பவுண்டரிக்கு விரட்டினார். இவர் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். பூணம் யாதவ் ‘சுழலில்’ பியோமன்ட் (23), கேப்டன் ஹெதர் நைட் (1) சிக்கினர்.
கோஸ்வாமி அசத்தல்
பின் இணைந்த சாரா டெய்லர், நடாலியா ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இவர்களின் சிறப்பான செயல்பாடு ‘ஸ்கோர்’ உயர கைகொடுத்தது. ஜுலன் கோஸ்வாமி ‘வேகத்தில்’ சாரா டெய்லர் (45), வில்சன் (0) அவுட்டாகினர். நடாலியா (51) அரை சதம் அடித்தார். காத்ரினா (34) ரன்-அவுட்டானார். முடிவில், இங்கிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 228 ரன்கள் எடுத்தது. ஜென்னி (25), லாரா (14) அவுட்டாகாமல் இருந்தனர்.இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஜுலன் கோஸ்வாமி 3 விக்கெட் வீழ்த்தினார்.
பூணம் அரைசதம்
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு மந்தனா (0) ஏமாற்றினார். கேப்டன் மிதாலி ராஜ் (17) ‘ரன்-அவுட்’ ஆனார். பொறுப்பாக ஆடிய ஹர்மன்பிரீத் கவுர் (51), பூணம் ராத் (86) நம்பிக்கை தந்தனர். சுஷ்மா வர்மா, ஜுலான் கோஸ்வாமி ‘டக்-அவுட்’ ஆனார்கள். வேதா (35) ஆறுதல் தந்தார்.மற்ற வீராங்கனைகள் ஏமாற்ற, இந்திய அணி 48.4 ஓவரில் 219 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்டாகி’ தோல்வி அடைந்தது.இதன்மூலம் முதன்முறையாக உலக கோப்பை வெல்லும் இந்தியாவின் கனவு வீணானது. இங்கிலாந்து அணி 4வது முறையாக (1973, 93, 2009, 2017) உலக கோப்பை வென்றது.