ஐ.எஸ்.எல். கால்பந்து: எடதோடிகா, லின்டோவுக்கு ரூ.1.1 கோடி ஜாம்ஷெட்பூர், கொல்கத்தா அணிக்கு ஒதுக்கப்பட்டனர்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் எடதோடிகா, லின்டோ ஆகியோர் தலா ரூ.1.1 கோடி ஊதியத்திற்கு ஜாம்ஷெட்பூர், கொல்கத்தா அணிகளுக்கு ஒதுக்கப்பட்டனர்.
ஐ.எஸ்.எல். கால்பந்து
4–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நவம்பர் 17–ந்தேதி தொடங்குகிறது. இந்த முறை அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஜாம்ஷெட்பூர், பெங்களூரு எப்.சி. புதிதாக இணைந்துள்ளன.
இதையொட்டி ஒவ்வொரு அணிகளுக்கும் உள்ளூர் வீரர்கள் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி மும்பையில் நேற்று நடந்தது. இதில் இந்திய வீரர்களான தடுப்பாட்டக்காரர் அனா எடதோடிகா, நடுகள வீரர் யுவ்ஜென்சன் லின்டோ ஆகியோர் வியப்புக்குக்குரிய விலை போனார்கள். எடதோடிகா ரூ.1.1 கோடிக்கு ஜாம்ஷெட்பூர் அணிக்கு ஒதுக்கப்பட்டார். இதே போல் லின்டோவை இரண்டு முறை சாம்பியனான அட்லெடிகோ கொல்கத்தா அணி ரூ.1.1 கோடிக்கு வசப்படுத்தியது. கோல் கீப்பர் சுப்ரதா பால் ரூ.87 லட்சத்திற்கு ஜாம்ஷெட்பூர் அணியிலும், பிரிதாம் கோட்டால் ரூ.75 லட்சத்திற்கு டெல்லி டைனமோஸ் அணியிலும் இணைகிறார்கள்.
சென்னையின் எப்.சி. அணியில் இடம் பெறும் வீரர்கள் வருமாறு:–
தோய் சிங் (ரூ.57 லட்சம்), பிக்ராம்ஜித் சிங் (ரூ.53 லட்சம்), தனசந்தனா சிங் (ரூ.50 லட்சம்), ஜெர்மன்பிரீத் சிங் (ரூ.12 லட்சம்), கார்டோஜோ (ரூ.30 லட்சம்), பவான் குமார் (ரூ.25 லட்சம்), கீனன் அல்மெய்டா (ரூ.20 லட்சம்), முகமது ரபி (ரூ.30 லட்சம்), தனபால் கணேஷ் (ரூ.44 லட்சம்), சஞ்சய் பால்முச்சி (ரூ.8 லட்சம்), பிரான்சிஸ்கோ பெர்னாண்டஸ் (ரூ.20 லட்சம்), ஷஹின் லார் மெலோலி (ரூ.8 லட்சம்).
நிதா அம்பானி பேட்டி
போட்டியின் ஒருங்கிணைப்பாளர் நிதா அம்பானி கூறுகையில், ‘10 அணிகள் என்பதால் போட்டிகளின் எண்ணிக்கை 61–ல் இருந்து 95 ஆக உயருகிறது. ஏறக்குறைய 5 மாதங்கள் போட்டி நடைபெறும். இது நீண்ட சீசன் என்பதால் ஒவ்வொரு ஆட்டத்திற்கு இடையே வீரர்களுக்கு போதுமான ஓய்வு கிடைக்கும். அதனால் போட்டியின் தரம் இன்னும் உயரும். ஐ.எஸ்.எல். போட்டிக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம் மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்து, ரூ.160 கோடி வழங்க உள்ளது’ என்றார்.