ஆசிய பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு: முதல் இடத்தை பிடித்தார் முகேஷ் அம்பானி
ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். முகேஷ் அம்பானி இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களுள் முக்கியமானவர். இவர் பார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆவார். ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை முதலிடத்தில் நீடித்துவந்த எவர்கிரேட் குழுமத்தின் சொத்து மதிப்பைவிட முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. எவர்கிரேட் குழும தலைவர் ஹியூ கா யானின் சொத்துமதிப்பு 40.6 பில்லியன் டாலர்கள் (2 லட்சத்து 62 ஆயிரத்து 468 கோடி ரூபாய்) எனவும், முகேஷ் அம்பானியின் தற்போதைய சொத்துமதிப்பு 42.1 பில்லியன் டாலர்கள் (2 லட்சத்து 72 ஆயிரத்து 165 கோடி ரூபாய்) எனவும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட போர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 14-வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.