ஆசிய ஹாக்கி: இந்திய பெண்கள் அணி சாம்பியன்
ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய பெண்கள் அணி கோப்பை வென்றது. விறுவிறுப்பான பைனலில் சீனாவை ‛சடன் டெத்’ முறையில் வீழ்த்தியது.
ஜப்பானில், பெண்களுக்கான 9வது ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடந்தது. இதன் பைனலில் இந்திய அணி சீனாவை எதிர் கொண்டது. போட்டியின் 24வது நிமிடத்தில் இந்தியாவின் நவ்ஜோத் கவுர் கோல் அடித்தார். 47வது நிமிடத்தில் சீன அணிக்கு ‛பெனால்டி கார்னர்’ வாய்ப்பு கிடைத்தது. இதை டியான்டியன் கோலாக மாற்றி பதிலடி தந்தார். இரு அணி வீராங்கனைகளும் கூடுதலாக கோல் அடிக்காததால் ஆட்ட நேர முடிவில் போட்டி 1-1 என சமநிலையை எட்டியது.
இதனால், போட்டி ‛பெனால்டி ஷூட் அவுட்’ முறைக்கு சென்றது. இதில் 5 வாய்ப்பு வழங்கப்பட்டது. இரு அணி சார்பிலும் தலா ஒரு வாய்ப்பை வீணடிக்கப்பட, மீண்டும் சமநிலை (4-4) ஆனது. இதனால், ‛சடன் டெத்’ முறை கடைபிடிக்கப்பட்டது. இதன்படி, முதலில் கோல் வாய்ப்பை வீணடித்த சீனா தோல்வியடைந்தது. இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
இதன் மூலம், இந்திய அணி ஆசிய கோப்பையில் இரண்டாவது முறையாக கோப்பை வென்றது. இதற்கு முன், 2004ல் பட்டத்தை வசப்படுத்தி இருந்தது. தவிர, இம்முறை 100 சதவீத வெற்றி பெற்று அசத்தியது.