ஊழல் புகாரில் சிக்கிய 3 இந்தியர்களை நாடு கடத்த இங்கிலாந்து மறுப்பு
2000–ம் ஆண்டு இந்தியா–தென் ஆப்பிரிக்க நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இந்தியாவில் நடந்த ஒரு நாள் போட்டி தொடரில் பெருமளவில் சூதாட்டம் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் சூதாட்ட தரகரான சஞ்சீவ் குமார் சாவ்லா இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார்.
இதேபோல் பொதுத்துறை வங்கி ஒன்றில் பணிபுரிந்தபோது சுமார் ரூ.20 லட்சத்தை தங்களுக்கு கடனாக வழங்கி மோசடி செய்த தம்பதியர் ஜதீந்தர்– ராணி அங்குராலா ஆகியோரும் தற்போது இங்கிலாந்தில் வசிக்கின்றனர்.
இந்த 2 வழக்குகள் தொடர்பாக மூவர் மீதும் சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்து உள்ளது. இவர்களை வழக்கு விசாரணைக்காக நாடு கடத்துமாறு இந்திய அரசு விடுத்த கோரிக்கையை அண்மையில் இங்கிலாந்து நிராகரித்தது.
கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான வழக்கில் சஞ்சீவ் குமார் சாவ்லா லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இதை விசாரித்த நீதிபதி ரெபெக்கா கிரேன், ‘‘தன்னை நாடு கடத்தினால் திகார் சிறையில் அடைத்து சித்ரவதை செய்வார்கள். அந்த சிறையில் போதிய மருத்துவ வசதி கிடையாது. இது மனித உரிமைகளுக்கு எதிரானது என மனுதாரர் கூறி இருக்கிறார். இதை நம்புவதற்கு இடம் இருக்கிறது. எனவே அவர் நாடு கடத்தப்படமாட்டார்’’ என்று தீர்ப்பு வழங்கினார்.
இதேபோல் ரூ.9 ஆயிரம் கோடி மோசடி வழக்கில் இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்து வரும் லண்டன் மாவட்ட மூத்த நீதிபதி எம்மா ஆர்த்புட் இந்திய தம்பதி ஜதீந்தர்–ராணி அங்குராலா ஆகியோரின் முறையீட்டு மனு மீது தீர்ப்பு வழங்கினார்.
அதில், ‘‘தம்பதியர் மீதான மோசடி வழக்கில் 25 ஆண்டுகள் கடந்து விட்டன. தற்போது ஜதீந்தருக்கு 69 வயதாகிறது. அவருக்கு உடல் நலக்குறைவும் உள்ளது. இதுபோன்ற நிலையில் அவரை நாடு கடத்துவது தவறாக அமையும்’’ என்றார். இதேபோல் அவருடைய மனைவியையும் நாடு கடத்த நீதிபதி மறுத்து விட்டார்.