டிரம்புக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை
வட கொரியாவின் அணு ஆயுத திட்டங்களை முடிவுக்கு கொண்டு வந்தே ஆக வேண்டும் என்பதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உறுதியாக உள்ளார்.
வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்களுக்கு எதிராக ஆசிய நாடுகளை ஒன்று திரட்டும் நோக்கத்துடன் டிரம்ப் அங்கு சுற்றுப்பயணம் தொடங்கி உள்ளார்.
முதல் கட்டமாக ஜப்பான் சென்றுள்ள அவர் சென்ற உடனேயே வடகொரியாவை மறைமுகமாக சாடினார். அப்போது அவர், ‘‘எந்த சர்வாதிகாரியும், அமெரிக்காவை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது’’ என சாடினார்.
ஜப்பானில் இப்படி கருத்து வெளியிட்டிருப்பதற்கு வட கொரியா பதிலடி கொடுத்துள்ளது.
அதில், ‘‘அமெரிக்க ஜனாதிபதி முட்டாள்தனமாக கருத்துக்களை தெரிவிப்பதின் மூலமாக வடகொரியாவை தீவிரமாக தூண்டி விடுகிறார். வடகொரியாவின் கடுமையான விருப்பம் மற்றும் துணிச்சலான நடவடிக்கைகளை அமெரிக்கா தவறாக மதிப்பிட்டது என்றால், வடகொரியா அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி ஒரு உறுதியான மற்றும் இரக்கமற்ற தண்டனையை விதிக்க நேரிடும். அதை சமாளிக்க வேண்டிய நிலைக்கு அமெரிக்கா நிர்ப்பந்திக்கப்படும்’’ என கூறப்பட்டுள்ளது.
மேலும், ‘‘டிரம்பின் கடுமையான கருத்துக்கள், அமெரிக்காவின் நிலப்பகுதிக்கு அணுசக்தி பேரழிவை கொண்டு வரக்கூடும்’’ என்றும் கூறப்பட்டுள்ளது.