மத்திய அரசு முற்றிலுமாக தோல்வி கண்டுவிட்டது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி பிரதமர் மோடி பழைய ரூ.500, 1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாக கூறி இந்த நாளை கருப்பு தினமாக அனுசரிக்க காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., பகுஜன்சமாஜ், இடதுசாரிகள் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கருப்பு பண எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்க போவதாக அறிவித்துள்ளன.
மம்தா தாக்கு
இந்த நிலையில் மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, இதுபற்றி அவர் தனது அடுக்கடுக்கான டுவிட்டர் பதிவுகளில் பிரதமர் மோடியை கடுமையாக தாக்கினார்.
ஒரு பதிவில் அவர் கூறுகையில், “நவம்பர் 8-ந்தேதி பணமதிப்பு நீக்கப்பட்டதன் முதலாம் ஆண்டு கருப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதை நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய போராட்டமாக நடத்தவேண்டும். இந்த ஊழல்(பண மதிப்பு நீக்கம்) பொருளாதாரத்தையே சீரழித்துவிட்டது. நாட்டின் மிகப்பெரிய பேரழிவு இது. எனவே இந்த ஊழலுக்கு எதிராக போராடவேண்டியது அவசியம் ஆகும்” என்று கூறியுள்ளார்.
மிகப்பெரிய சுயநல வரி
இன்னொரு பதிவில் “ஜி.எஸ்.டி.(கிரேட் செல்பிஷ் டாக்ஸ்) என்றால் மிகப்பெரிய சுயநல வரி என அர்த்தம். இது மக்களை பெரிதும் துன்புறுத்துகிறது. வேலை வாய்ப்புகளை பறித்துக் கொண்டது. வர்த்தகத்தை சேதப்படுத்தி இருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தையே கபளகரம் செய்து விட்டது. மேலும் ஜி.எஸ்.டி.யால் ஏற்பட்ட பாதிப்பை சமாளிக்க முடியாமல் மத்திய அரசு முற்றிலுமாக தோல்வி கண்டுவிட்டது” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும், நவம்பர் 8-ந்தேதி நாம் அனைவரும் டுவிட்டர் பதிவுகளின் சுயவிவர பகுதியை சதுரவடிவ கருப்பு வண்ணமாக மாற்றி எதிர்ப்பை தெரிவிப்போம் என்றும் கூறியுள்ளார்.