பிரதமரிடம், ரூ.1,500 கோடி நிதி கேட்டு இருக்கிறோம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
சென்னை விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கவனமாக கேட்ட பிரதமர்
பிரதமருடன் சந்திப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அப்போது தமிழகத்தில் கனமழை காரணமாக சென்னை மாநகரம் அதனை சுற்றியுள்ள காஞ்சீபுரம், திருவள்ளூர், மற்றும் நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற பகுதிகள் பாதிக்கப்பட்டது தொடர்பாக கவனமாக கேட்டறிந்தார்.
அதற்கு தேவையான நிவாரண தொகை அளிப்பதற்கு மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சரிசெய்வதற்கு மத்திய அரசு தேவையான நிதி உதவி அளிப்பதாகவும் சொன்னார். அதற்காக அவரிடம் தமிழக மக்கள் சார்பாக நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
‘தினத்தந்தி’ பவளவிழாவுக்கு வருகை தந்தாலும், 30 நிமிடம் எங்களுக்காக ஒதுக்கி தந்து சென்னை மாநகர் பகுதிகள் எங்கெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளதோ? அங்கு நிரந்தரமாக இனிமேல் பாதிக்கப்படாததற்கு என்ன வழி இருக்கிறது என்பதையும் கேட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.1,500 கோடி நிதி உதவி
இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- பிரதமர் நரேந்திரமோடியிடம் எவ்வளவு நிதி கேட்கப்பட்டு இருக்கிறது?
பதில்:- சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் போன்ற பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு மழைநீர் வடிகால் வசதி அமைக்க சுமார் ரூ.1,500 கோடி நிதி கேட்டு இருக்கிறோம். மத்திய அரசு தேவையான அளவுக்கு நிதி ஒதுக்குவதாக பிரதமர் சொல்லி இருக்கிறார்.
கேள்வி:- கடந்த 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தை சந்தித்த போதும், அரசு தேவையான நடவடிக்கைகள் இதுவரை செய்யவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது?
பதில்:- தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் அரசு மின்மோட்டார் மூலம் வெளியேற்றி வருகிறது. மாற்று ஏற்பாடு என்பது சாதாரண விஷயம் அல்ல. சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் எந்த அனுமதியும் பெறாமல் பலர் வீடுகட்டிவிட்டார்கள். உதாரணமாக பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியை ஒட்டியுள்ள பகுதிகள் பாசன பகுதியாக இருந்தது. அந்த இடங்களில் இப்போது வீடு உள்ளது.
கேள்வி:- ஆக்கிரமிப்புகள் அதிகளவில் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகிறதே?
பதில்:- ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.
உள்ளாட்சி தேர்தல்
கேள்வி:- உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது?
பதில்:- உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரையில், நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. வழக்கு முடிந்த பிறகு தான் தேர்தலை நடத்த முடியும். தீர்ப்பு வந்த பிறகு நிச்சயம் தேர்தல் நடக்கும். ஜெயலலிதா இருந்த போது தேர்தல் நடத்தலாம் என்று சொன்ன சமயத்தில், யார் போய் நீதிமன்றத்தில் தடை ஆணை வாங்கினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த தடையினால் தான் உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாமல் போனது.
இரட்டை இலை-தாமரை
கேள்வி:- இரட்டை இலை, தாமரை இணைவதற்கான சூழல் இருக்கிறதா?
பதில்:- இன்னும் தேர்தலே வரவில்லை. யூகத்தின் அடிப்படையில் நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள். தேர்தல் வரும்போது ஜெயலலிதா அரசு நல்ல நடவடிக்கை மேற்கொள்ளும்.
கேள்வி:- நிவாரணத்தொகை மக்களுக்கு வழங்க இருக்கிறீர்களா?. ஏற்கனவே 2015-ம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்ட போது ரூ.5 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது.
பதில்:- அந்த சமயம் புயல் வந்தது. நிறைய மக்களுக்கு சேதத்தை ஏற்படுத்தியது. இது அப்படி இல்லை. கனமழை தான் பெய்து இருக்கிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள 315 இடங்களில் தண்ணீர் தேங்கியது. அதில் 275 இடங்களில் தண்ணீரை அகற்றிவிட்டோம். இன்னும் 40 இடங் களில் தான் தண்ணீர் இருக்கிறது. அதுவும் விரைவாக அகற்றப்பட்டுவிடும்.
விரைவில் தீர்வு
கேள்வி:- சென்னை புறநகர் பகுதிகளில் மீட்பு பணிகள் மிகவும் தொய்வாக நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது?
பதில்:- ஏரிகள், குளங்கள் அருகே தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை கட்டி இருக்கிறார்கள். அங்கு தேங்கி இருக்கும் நீரை படிப்படியாக தான் அகற்ற முடியும். நிரந்தர தீர்வு விரைவில் காணப்படும்.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.
இந்த பேட்டியின் போது, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.