அணு ஆயுதப் பிரச்சினைக்கு தீர்வு அவசியம் என்று கர்ஜனை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று தென்கொரியா போய்ச் சேர்ந்தார். தலைநகர் சியோலுக்கு வெளியேயுள்ள ஓசன் விமானப்படை தளத்தில், மனைவி மெலனியா டிரம்புடன் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் சென்று தரை இறங்கினார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுடன் அங்கு கேம்ப் ஹம்ப்ரேஸ்சில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளத்துக்கு ஹெலிகாப்டரில் சென்றார்.
அங்கு அவர் அமெரிக்கா மற்றும் தென்கொரியா வீரர்களை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து அவர் அங்கு நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்களால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களுக்கு தீர்வு கண்டே ஆக வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் வடகொரியா விவகாரம் தொடர்பாக ராணுவ தளபதிகளை சந்தித்து பேசியது தொடர்பாக குறிப்பிடுகையில், “கடைசியில் இதுதான் நிச்சயம் வேலை செய்யும். இதுதான் எப்போதும் வேலை செய்யும். அது வேலை செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டார். ஆனால் இதுபற்றி அவர் விரிவாக எதுவும் குறிப்பிடவில்லை.
தென் கொரியாவின் அதிபர் மூன் ஜே இன்னை அவர் பாராட்டினார். அப்போது அவர், “வடகொரியாவை எப்படி எதிர்கொள்வது என்பதில் கருத்து வேறுபாடுகள் தென் கொரியாவின் மிகப்பெரிய ஒத்துழைப்பு பாராட்டுக்கு உரியது” என்று குறிப்பிட்டார்.