Breaking News
பயங்கரவாத வழக்கில் அமெரிக்காவில் இந்தியருக்கு 27½ ஆண்டு சிறை
இந்தியாவை சேர்ந்தவர் யாஹ்யா பாரூக் முகமது (வயது 39). இவர் அமெரிக்காவில் ஓஹியோ மாகாண பல்கலைக்கழகத்தில் 2002-04 ஆண்டுகளில் பொறியியல் படித்தார். 2008-ம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்ற பெண்ணை மணந்து கொண்டார்.
இவர் தனது சகோதரர் இப்ராகிம் முகமது மற்றும் ஆசிப் அகமது சலீம், சுல்தான் ரூம் சலீம் ஆகிய 3 பேருடன் சேர்ந்து அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட அல்கொய்தா தலைவர் அன்வர் அல் அவ்லாகியின் அழைப்பை ஏற்று, ஏமனுக்கு சென்று பல்லாயிரகணக்கான டாலர் நிதியை பயங்கரவாத செயல்களை செய்வதற்காக அளிக்க சதி செய்து செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக அவர்கள் போலீஸ் வசம் சிக்கி, கோர்ட்டில் பயங்கரவாத வழக்கு தொடரப்பட்டது.
இதுமட்டுமின்றி வழக்கை விசாரித்த நீதிபதி ஜாக் ஜவ்ஹாரியை கொலை செய்ய சதி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது கோர்ட்டில், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை யாஹ்யா பாரூக் முகமது ஒப்புக்கொண்டார். மற்ற மூவரும் ஒப்புக்கொள்ளவில்லை. அவர்கள் எதிர் வழக்காட முன் வந்துள்ளனர்.
இதையடுத்து குற்றத்தை ஒப்புக்கொண்ட யாஹ்யா பாரூக் முகமதுவுக்கு 27½ ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
இந்த தண்டனை காலம் முடிந்ததும், அவர் ஏற்கனவே கேட்டுக்கொண்டதுபோல இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.