அரபிக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வட கிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 27-ந் தொடங்கியது. ஒரு வார கால தாமதமாக பருவமழை தொடங்கினாலும் தமிழகம் முழுவதும் பருவமழை ஓரளவு மழை பொழிவை தந்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. குறிப்பாக, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த 31-ந் தேதி முதல் பெய்து வரும் கனமழை காரணமாக தண்ணீர் இன்றி வறண்டு கிடந்த நீர் நிலைகளில் தற்போது தண்ணீர் வந்துள்ளது.
சென்னை வாழ் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாய் திகழும் பெரும்பாலான ஏரிகளில் தற்போது தண்ணீர் வந்துள்ளது. இதனால் சென்னை மக்களின் குடிநீர் தேவையை இன்னும் சில மாதங்களுக்கு பூர்த்தி செய்ய முடியும் என வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். இருந்தபோதும், சென்னையில் மழைக்காலத்தில் கிடைக்கும் மழைநீர் முறையாக பயன்படுத்தப்படாமல் வீணாக கடலில் கலப்பதாகவும், இதற்கு காரணம் சென்னையில் உள்ள ஆறுகள், மற்றும் நீர் நிலைகளை தூர்வாராமல் இருப்பதே ஆகும் என பெரும்பாலானோர் குற்றம் சாட்டுகின்றனர்.
பெய்து வரும் பருவமழையில், தற்போது வரை சென்னை 93 சதவீதம் அதிக மழையை பெற்றுள்ளது என்கிறது வானிலை ஆய்வு மையம். ஆனால் சென்னையில் ஒரு சில ஏரிகளின் நீர்மட்டம் பாதி கூட நிரம்பவில்லை. மீதமுள்ள தண்ணீர் எங்கே போனது என்று கேட்டால் மெரினா கடலின் நிறத்தை பார்த்தாலே பலருக்கு புரியும் என்கின்றனர் சில வல்லுநர்கள்.
இருந்தபோதும் இனி வரும் காலங்களிலாவது மழைநீரை சேமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில், இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்துள்ளதாகவும், கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-
இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இருந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்துள்ளது. ஆனால் தற்போது கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு கேரள பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல், அந்தமானை ஒட்டிய மலேசிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது மேலும் தீவிரம் அடையும்.
இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும். தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அந்தமான் கடல் பகுதியில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை பொறுத்து தமிழகத்தில் பெய்ய இருக்கும் மழை பொழிவில் மாற்றம் ஏற்படும்.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தமட்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியில் 8 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.