பாக்., பயங்கரவாதியால் ஆபத்து : அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை
‘பாகிஸ்தானைச் சேர்ந்த, ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன், மசூத் அசார் மிகவும் ஆபத்தானவன்; சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்திருக்க வேண்டும்’ என, அமெரிக்கா, மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும், ஜெய்ஷ் – இ – முகமது என்ற பயங்கரவாத அமைப்பை, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக, ஐ.நா., ஏற்கனவே அறிவித்துஉள்ளது.
நம் நாட்டில், பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, அதன் தலைவனான, மசூத் அசாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க, மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது.
மசூத் அசாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானம், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்டது. ஆனால், சீனாவின் எதிர்ப்பால், அது நிறைவேறவில்லை.
சமீபத்தில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள், இது தொடர்பாக கொண்டு வந்த தீர்மானம், சீனாவின் எதிர்ப்பால் நிறைவேறவில்லை.
இது குறித்து, அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், ஹீத்தர் நார்ட் கூறியதாவது:
மசூத் அசார், மிகவும் மோசமானவன்; ஆபத்து நிறைந்தவன். அவன், சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் இடம்பெற வேண்டும்.
இதை, நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், சில காரணங்களால், சீனா எதிர்ப்பு தெரிவிப்பதால், அதற்கான தீர்மானம் நிறைவேறவில்லை.
அமெரிக்க சட்டங்களின்படி, ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பை, வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாகவே பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.