வருமானவரித்துறையை வைத்து அரசியல் நடத்தும் அவசியம் பா.ஜ.க.விற்கு இல்லை டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்
தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தீவிரவாதத்தை ஒடுக்குவது போல தான் கருப்பு பணத்தை ஒழிப்பு நடவடிக்கையும். இந்த சோதனை எல்லாம் கருப்பு பண ஒழிப்புக்கான ஆரம்பம் தான். இந்த வருமானவரி சோதனை என்பது சாதாரண நடவடிக்கை தான்.
இதற்கு ஏன் சிலர் பயப்படுகிறார்கள் என்றே தெரியவில்லை. அப்படி எதுவும் வரி ஏய்ப்பு இவர்கள் செய்யவில்லை என்றால் ஆவணங்களை காட்டிவிட்டு, நிம்மதியாக இருக்க வேண்டியது தானே. மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் ஓராண்டுக்குப் பிறகு தான், வருமானவரித்துறையினரின் இத்தகைய நடவடிக்கைகள் ஆரம்பித்து உள்ளன.
இதில் முறைகேடான முறையில் செய்யப்பட்ட பரிமாற்றங்கள், வாங்கப்பட்ட சொத்துகள் குறித்து இந்தப்பிரிவு ஆய்வு செய்யும். ‘ஆபரேஷன் கிளன் பிளாக் மணி’ என்கிற பெயரில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஒரு குடும்பத்தைச் சோதனையிட 1,800 அதிகாரிகளா? என்று தவறான கேள்வி எழுப்பப்படுகிறது. உண்மையில் 1,800 அதிகாரிகள் சேர்ந்து சோதனை நடத்தும் அளவிற்கு ஒரு குடும்பம் சொத்து சேர்த்து இருக்கிறதா? என்று தான் கேள்வி எழுப்பப்பட வேண்டும்.
வருமானவரி சோதனை கன்னித்தீவு போல் இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார். கன்னித்தீவு போல வரி ஏய்ப்பு தமிழகத்தில் நடப்பதற்கு நாம் அனைவரும் தலைகுனிய வேண்டும்.
வருமான வரித்துறையினரின் சோதனை என்பது முதற்கட்ட நடவடிக்கை தான். இதற்குப்பிறகு இன்னும் நிறைய வேலைகள் இருக்கிறது. கைப்பற்றப்படும் ஆவணங்களைப் பொறுத்து தான் மேற்கொண்டு நடவடிக்கையை அவர்கள் தீர்மானிக்க முடியும்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று டி.டி.வி. தினகரன் கூறுகிறார். அவரிடம் எங்களுக்கு என்ன அரசியல் வேண்டி இருக்கிறது. ஒரு கட்சியின் பிரிவுக்குத் தலைமை தாங்கும் இவரைக்கண்டு எல்லாம் பா.ஜ.க பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. வருமானவரித்துறையை வைத்து அரசியல் நடத்தும் அவசியம் பா.ஜ.க.விற்கு என்றைக்கும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.