கல்வி பிரசார இயக்கத்துக்கு தமிழக மாணவியை தேர்ந்தெடுத்தார், ஒபாமா மனைவி
அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையில், ஜனாதிபதி ஒபாமா மனைவி மிச்செல் ஒபாமா, வளரும் தலைமுறையினருக்கான கல்வி பிரசார இயக்கம் ஒன்றை தொடங்கி செயல்படுத்தி வருகிறார். இந்த இயக்கத்துக்கு இந்தியாவை பூர்விகமாக கொண்ட 16 வயது மாணவி சுவேதா பிரபாகரன் உள்பட 17 பேரை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.
இந்த மாணவி தமிழ்நாட்டின் திருநெல்வேலி பகுதியை சேர்ந்தவர். இவரது பெற்றோர், 1998–ம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். அங்குள்ள இந்தியானாபொலிஸ் நகரில் பிறந்தவர் சுவேதா.
வெர்ஜீனியாவில் உள்ள தாமஸ் ஜெபர்சன் உயர்நிலைப்பள்ளியில் தற்போது சுவேதா படித்து வருகிறார். இளைய தலைமுறையினருக்கு கம்ப்யூட்டர் அறிவியல் கற்றுத்தருவதில் அவரது முயற்சிகளை கவுரவித்து, அவரை கல்வி பிரசார இயக்கத்துக்கு மிச்செல் ஒபாமா தேர்ந்தெடுத்துள்ளார்.
இதுகுறித்து சுவேதா கூறும்போது, ‘‘வளரும் தலைமுறையினருக்கான கல்வி பிரசார இயக்கமான மாணவர் ஆலோசனை குழுவில் என்னை இடம்பெறச்செய்திருப்பது, எனக்கு கிடைத்துள்ள கவுரவம். இதில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஆர்வம் கொண்டுள்ளேன்’’ என குறிப்பிட்டார்.
இவர் ‘எவ்ரிபடி கோட் நவ்’ என்ற நிறுவனத்தின் தலைமை பதவியிலும் உள்ளார். இதற்காக கடந்த 2015–ம் ஆண்டு, ‘மாற்றத்துக்கான சேம்பியன்’ என்ற விருதை வெள்ளை மாளிகை வழங்கி கவுரவித்தது, குறிப்பிடத்தக்கது.
நன்றி் : தினத்தந்தி