Breaking News
சசிகலாவின் அண்ணன் மகள்களிடம் வருமானவரித்துறையினர் விசாரணை

வருமான வரித்துறை அதிகாரிகள் சசிகலா உறவினர்கள், நண்பர்களின் வீடுகள், நிறுவனங்கள் என 187 இடங்களில் மெகா ரெய்டு நடத்தினர். கடந்த 9–ந்தேதி முதல் நடந்த சோதனை 13–ந்தேதியுடன் நிறைவடைந்தது. இந்த சோதனையில் ரூ.1,430 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரியவந்ததாகவும், முக்கிய ஆவணங்களும், தங்க, வைர நகைகளும் அதிகாரிகள் கையில் சிக்கியதாக தகவல் வெளியாகின.

சென்னை மகாலிங்கபுரம் ராமநாதன் தெருவில் உள்ள சசிகலாவின் அண்ணன் மகனும், ஜெயா டி.வி.யின் தலைமை செயல் அதிகாரியுமான விவேக் வீட்டில் கடந்த 13–ந்தேதி சோதனை முடிந்த கையோடு, அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

டி.டி.வி. தினகரன் ஆதரவாளரும், கர்நாடக மாநில அ.தி.மு.க. (அம்மா) செயலாளருமான புகழேந்தியும் அன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்தநிலையில் அவர் நேற்று மீண்டும் நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வந்தார். அவர் மதியம் 1.05 மணிக்கு ஆஜராகிவிட்டு மதியம் 2.30 மணியளவில் புறப்பட்டு சென்றார்.

சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா, அவருடைய கணவர் கார்த்திகேயன், இளைய மகள் ‌ஷகிலா, அவருடைய கணவர் ராஜராஜசோழன் ஆகியோருக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர்.

இதனையடுத்து கிருஷ்ணபிரியா உள்ளிட்ட 4 பேரும் நேற்று காலை 11.20 மணியளவில் நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்திற்கு வந்தனர்.

வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் கிருஷ்ணபிரியா, கார்த்திகேயன், ‌ஷகிலா, ராஜராஜசோழன் ஆகியோரிடம் தனித்தனியாக காலை 11.30 மணியளவில் அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். இதில் கிருஷ்ணபிரியா தம்பதியிடம் மதியம் 12.30 மணியளவில் விசாரணை முடிந்தது.

‘ஜாஸ் சினிமாஸ்’, ‘மிடாஸ்’ மதுபான ஆலை உள்ளிட்ட நிறுவனங்களில் கார்த்திகேயன் முக்கிய பொறுப்பு வகிப்பதால், அந்த நிறுவனங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கிருஷ்ணபிரியா வீடு, அவர் நடத்தி வரும் அறக்கட்டளை மற்றும் நிறுவனங்களில் சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில் அவரிடம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

‌ஷகிலா, ராஜராஜசோழன் ஆகியோரிடம் மதியம் 2 மணி வரை விசாரணை நீடித்தது. ‌ஷகிலாவின் பெயரில் வெளிநாடுகளில் இருந்து சொகுசு கார்கள் இறக்குமதி செய்யப்பட்ட ஆவணங்கள் அதிகாரிகளிடம் சிக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து அவரிடம் அதிகாரிகள் விளக்கம் கேட்டதாக கூறப்படுகிறது.

சசிகலாவின் குடும்ப நிறுவனங்கள் பலவற்றில் ராஜராஜசோழனும் முக்கிய பொறுப்பு வகிப்பதால், அதுதொடர்பாக அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது.

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டி.வி. மற்றும் நமது எம்.ஜி.ஆர். அலுவலகங்களில் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விளக்கம் அளிக்குமாறு அதன் பொதுமேலாளர் நடராஜனுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி நடராஜன் நேற்று காலை 10 மணியளவில் வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். அங்கு அவரிடம் மதியம் 12.40 மணி வரை விசாரணை நடந்தது.

வருமான வரித்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜரானவர்களிடம், மீண்டும் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் உடனடியாக ஆஜராக வேண்டும் என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.