Breaking News
டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு பெட்ரோல், டீசல் கிடையாது; விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு

புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 ஆகிய உயர் மதிப்புடைய நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8–ந் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.

பெட்ரோல் விற்பனை நிலையங்கள்
இதையடுத்து நாடு முழுவதும் கடுமையான பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. பெட்ரோல் விற்பனை நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், சுங்க வரி போன்றவற்றுக்கு பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த கால அவகாசம் தரப்பட்டது.

கால அவகாசம் முடிவடைந்த நிலையில் சில்லரை தட்டுப்பாட்டை போக்கும் வகையில் பெட்ரோல் பங்குகளுக்கு ‘சுவைப்’ கருவிகள் வழங்கப்பட்டன. இதற்காக எந்தவித வரியும் (சேவை வரி தவிர) தனியாக விதிக்கப்படவில்லை.

இந்தநிலையில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வைக்கப்பட்டு உள்ள ‘சுவைப்’ கருவிகளுக்கு தனி பயன்பாட்டு வரி விதிக்க மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி முடிவு செய்தது.

ஒரு சதவீத வரி
அதன்படி 9–ந் தேதி (இன்று) முதல் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வைக்கப்பட்டு உள்ள ‘சுவைப்’ கருவிகளுக்கு தனி பயன்பாட்டு வரி (எம்.டி.ஆர்.) விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதாவது இனி பெட்ரோல் விற்பனை நிலையங்களில் தனி நபர் 1,000 ரூபாய்க்கு குறைவாக பெட்ரோல் நிரப்பி அந்த தொகையை தனது ‘டெபிட்’ கார்டு மூலம் தரும்போது, சம்பந்தப்பட்ட பெட்ரோல் டீலர் 0.25 சதவீத வரி செலுத்தவேண்டும். ரூ.1,000 முதல் ரூ.2 ஆயிரம் வரையிலான தொகைக்கு ‘சுவைப்’ செய்யும்போது 0.50 சதவீதமும், ரூ.2 ஆயிரத்துக்கு மேல் பெட்ரோல் தொகையை ‘சுவைப்’ செய்யும் போது ஒரு சதவீத வரியும் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் கிரெடிட் கார்டு மூலம் ஒருமுறை ‘சுவைப்’ செய்தாலே ஒரு சதவீத வரி செலுத்தவேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த வரி விதிப்பு முறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

எதிர்ப்பு
இந்த நடவடிக்கைக்கு பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. ஏற்கனவே பணத்தட்டுப்பாடு காரணமாக பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில், இந்த புதிய வரி கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாக அவர்கள் கூறி உள்ளனர்.

மேலும் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இன்று முதல் ‘சுவைப்’ கருவிகள் மூலம் பெட்ரோல்–டீசல் வழங்குவதில்லை என்றும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பெட்ரோலிய பொருட்கள் விற்பனையாளர்கள் சங்க மாநில தலைவர் முரளி கூறியதாவது:–

டெபிட், கிரெடிட் கார்டுகள்
இது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்று தான். இதுவரை பெட்ரோல் விற்பனை நிலையங்களில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் பெட்ரோல், டீசல் வழங்குகையில், எந்த வரியையும் வங்கிகள் வசூலிக்கவில்லை. ஏற்கனவே பணத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தி மக்களை கஷ்டப்படுத்தி வரும் ரிசர்வ் வங்கி, இப்போது எங்கள் தலையில் கை வைத்து இருக்கிறது.

இதுநாள் வரையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.2.40–ம், டீசலுக்கு ரூ.1.42–ம் எங்களுக்கான நிர்ணய வரியாக இருந்தது. அந்த வரியின் அடிப்படையில் தான் பல வருடங்களாக தொழில் செய்து வருகிறோம்.

சில்லரை பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக பெட்ரோல், டீசல் வழங்குவதில் ‘சுவைப்’ கருவிகளை பயன்படுத்தி வந்தோம். தற்போது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் ஒரு சதவீத வரி வசூலிக்கப்படும் என்று அறிவித்து இருப்பது கண்டிக்கத்தக்கது.

நஷ்டம்
தற்போது பணத்தட்டுப்பாடு காரணமாக நீடித்து வரும் அசாதாரண சூழ்நிலையில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் பங்களிப்பு தான் முக்கியமாக இருக்கிறது. பெட்ரோல் விற்பனை நிலையங்களில் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலமான பணபரிமாற்றம் 40 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது. எனவே இந்த சூழ்நிலையில் விதிக்கப்படும் புதிய வரி மூலம் கணிசமான தொகை கிடைக்கும் என்று ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்து இருக்கிறது.

இதனால் பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு தேவையில்லாத நஷ்டம் ஏற்படும். எனவே இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னையில் உள்ள 600 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 4 ஆயிரத்து 470 பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் இன்று (திங்கட்கிழமை) முதல் ‘சுவைப்’ கருவிகளை பயன்படுத்தி டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்பட மாட்டாது. பொதுமக்களும் எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பார்கள் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.