அயோத்தி விவகாரம்: முஸ்லிம் தலைவர்களுடன் ஸ்ரீ ரவிசங்கர் சந்திப்பு
‘வாழும் கலை’ அமைப்பின் நிறுவனரும், ஆன்மிக குருவுமான ஸ்ரீரவிசங்கர் நேற்று முன்தினம் அயோத்தி சென்று பலரையும் சந்தித்தார்.
தொடர்ந்து நேற்று அவர் பராங்கி மகால் இஸ்லாமிய மையத்தின் தலைவரும், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் மூத்த உறுப்பினருமான மவுலானா ரஷீத் பராங்கிமஹ்லி உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்களை சந்தித்து பேசினார்.
அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், ‘‘நான் கோர்ட்டுகளை மதிக்கிறேன். அதே நேரத்தில், அவை இதயங்களை இணைக்க முடியாது. 100 ஆண்டுகளுக்கு பின்னர் கூட கோர்ட்டு தீர்ப்பு நிலைத்து நிற்கும். அதே நேரத்தில், நாம் இதயங்களின் வழியாக (பேச்சு வார்த்தை நடத்தி) தீர்வு கண்டு விட்டால், அது தலைமுறைகளுக்கும் அங்கீகரிக்கப்படும்’’ என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறும்போது, ‘‘ஆனால் இந்த முயற்சிகளை எடுப்பதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டு விட்டது என்பதை ஒப்புக்கொள்கிறோம். இந்தப் பிரச்சினை விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். பேச்சு வார்த்தை மூலம் பெரிதான வகையில் நாம் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன்’’ எனவும் குறிப்பிட்டார்.