போயஸ் கார்டனில் வருமான வரித்துறை சோதனை: ஈபிஎஸ், ஓபிஎஸ் மீது டிடிவி தினகரன் கடும் தாக்கு
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசி கலாவின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் சமீபத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.இந்த சோதனைகளில் ஏராளமான சொத்து ஆவணங்கள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சோதனையை தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர்களை வருமான வரி அதிகாரிகள் நேரில் அழைத்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் வருமான வரி அதிகாரிகள் நேற்று திடீரென்று சோதனை நடத்தினார்கள். நேற்று இரவு 9.55 மணிக்கு வருமான வரித்துறையைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அங்கு வந்தனர். அவர்கள் ஜெயலலிதா வீட்டில் உள்ள பூங்குன்றனின் அலுவல் சார்ந்த அறைக்கு சென்று சோதனை போட்டனர். நான்கு மணி நேரம் இந்த சோதனை நீடித்தது. அதிகாலை சுமார் 2 மணியளவில் சோதனை நிறைவு பெற்றது.
இந்த நிலையில், போயஸ் கார்டனில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கு எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். தனது டுவிட்டரில் டிடிவி தினகரன் கூறியிருப்பதாவது:- போயஸ் கார்டனை நினைவு இல்லமாக மாற்றுவோம் என்று சொல்லி தொண்டர்களையும் மக்களையும் தொடர்ந்து ஏமாற்றி வரும் எடப்பாடியின் துரோக அரசு, இந்த துரோக செயலுக்கு என்ன பதில் சொல்ல போகிறது? அ.தி.மு.க.வின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் அவர்கள் இருவரும் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
தொண்டர்களையும் மக்களையும் தொடர்ந்து ஏமாற்றி வரும் எடப்பாடியின் துரோக அரசு, இந்த துரோக செயலுக்கு என்ன பதில் சொல்ல போகிறது? போயஸ் கார்டனில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதற்கு காரணம் எதுவாக இருந்தாலும், இது அம்மாவின் ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகம். இந்த துரோகத்தின் பின்னணியில் எடப்பாடியும் பன்னீர்செல்வமும்தான் இருக்கிறார்கள்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தங்களின் ஆட்சியை, பதவியை காப்பாற்றிக்கொள்ள கழகத்தை அடகு வைத்த எடப்பாடியும் பன்னீரும் இன்னும் எத்தனை துரோகங்களை செய்யக் காத்திருக்கிறார்கள்..?