பா.ஜனதா எம்.பி. மீது கிரிமினல் வழக்கு தொடருவேன் நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டி
நடிகர் பிரகாஷ்ராஜ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சமூக வலைத்தளங்களில் எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தவறான தகவல்கள் வெளியிடுவதை நான் கண்டிக்கிறேன். இது தொடர்பாக “ஜஸ்ட் ஆஸ்க்” என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்குகிறேன். நமது நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் கோபம், கருத்து, எண்ணங்களை வெளிப்படுத்த உரிமை உள்ளது. ஆனால் அவ்வாறு கருத்துகளை வெளிப்படுத்துபவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரவவிடுகிறார்கள்.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ‘மகனை இழந்து துக்கத்தில் இருந்த தாயை விட்டுவிட்டு நடனம் ஆடுபவருடன் ஓடிப்போனவர் பிரகாஷ்ராஜ், அத்தகையவருக்கு மோடி மற்றும் யோகியை பற்றி பேச தகுதி இல்லை’ என்று என்னை பற்றி பா.ஜனதாவை சேர்ந்த பிரதாப் சிம்ஹா எம்.பி. சமூக வலைத்தளத்தில் தவறான கருத்து தெரிவித்து உள்ளார்.
பிரதாப் சிம்ஹா எம்.பி. பொறுப்பான பதவியில் இருக்கிறார். அவர் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய தகவல்களை திரித்து கூறியது சரியா?. சட்ட ரீதியாக அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். எனது கேள்விகளுக்கு அவர் சரியான பதிலை அளிக்க வேண்டும். மேலும் 10 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்கவிட்டால் நான் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடருவேன். எனது புகழை கெடுக்க வேண்டும் என்ற தவறான நோக்கத்துடன் இத்தகைய தகவலை அவர் வெளியிட்டுள்ளார். முகநூல், டுவிட்டர் பக்கத்தில் இருந்து அவர் என்னை பற்றிய தவறான பதிவுகளை நீக்க வேண்டும். அவரிடம் நஷ்டஈடும் கேட்பேன். ஜனநாயகத்தில் நான் ஒரு கருத்தை சொன்னால், உடனே கர்நாடகத்தை விட்டு தமிழ்நாட்டுக்கு போ என்று பலர் கருத்துகளை வெளியிட்டு மகிழ்ச்சி அடைகிறார்கள். நடிகை தீபிகா படுகோனே தலையை வெட்டினால் ரூ.10 கோடி பரிசு தருவதாக சொல்கிறார்கள். திறமையான நடிகர்-நடிகைகளை அவமானப்படுத்துகிறார்கள். இந்த நாட்டின் குடிமகனாக நான் முதலில் இந்த சமூக வலைத்தள தாக்குதலை கண்டிக்கிறேன். ஒரு குடிமகன் இன்னொரு குடிமகனுக்கு எதிராக கருத்து வன்முறையில் ஈடுபடுவது சரிதானா?.
பிரதாப் சிம்ஹா எம்.பி. போன்ற அரசியல்வாதிகள் நமக்கு தேவையா?. நமக்கு கலாசாரம் தெரிந்த, எளிமையான அரசியல்வாதி தான் தேவை. நமது நாட்டை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்லும் அரசியல்வாதிகள் வேண்டும். சமூக வலைத்தளம் மூலம் தவறான தகவல்களை வெளியிட்டு இந்த சமுதாயத்தை தூண்ட வேண்டாம். இது வெறும் எனது கருத்து மட்டும் அல்ல. இது எனது உரிமையும் கூட. இதற்கு எதிராக நான் போராடுவேன்.
இவ்வாறு நடிகர் பிரகாஷ்ராஜ் கூறினார்.